Published : 09 Oct 2023 12:51 PM
Last Updated : 09 Oct 2023 12:51 PM
டெல் அவிவ்: காசா அருகே இஸ்ரேலிய பகுதியில் நடைபெற்ற இசை விழாவில் பங்கேற்ற 260 பேரின் உடல்கள் மீட்டுள்ளதாக இஸ்ரேலின் மீட்பு பிரிவான ஷாகா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி 2 மணி நேரத்தில் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் துளைத்தெடுத்தன. சற்றும் எதிர்பாராத ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அத்துடன், ஹமாஸ் பயங்கரவாதிகள் பலரும் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பேரா க்ளைடர்கள் எனப் பலவாறாக இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் நுழைந்து செல்லும் வழிகளெல்லாம் தாக்குதல் நடத்தினர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நகருக்குள் நுழைந்தது மட்டுமல்லாது, கண்ணில் பட்ட பொதுமக்களையெல்லாம் சுட்டுக் கொல்லும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் ராணுவம் துரிதமான பதில் தாக்குதலில் ஈடுபட்டது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் நிலைகளை நோக்கி வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இந்தத் தாக்குதல் காரணமாக, ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாலஸ்தீனத்தின் காசா நகரில் 426 இடங்களில் இஸ்ரேல் விமானப் படை நடத்திய பதில் தாக்குதலில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாகின. 313 பேர் உயிரிழந்தனர். 1,800 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால், காசா எல்லை பகுதிக்கு அருகே வசிக்கும் பாலஸ்தீனர்கள் 20,000 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, தொலைதூர பகுதிகளுக்கு சென்று, ஐ.நா. பள்ளிக்கூடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், ‘‘இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் முழு பலத்தையும் பயன்படுத்தி, காசா நகரில் ஹமாஸ் தீவிரவாதிகள் செயல்படும் அனைத்து இடங்களையும் அழிப்போம். இந்த போர் நீண்ட காலம் நடக்கும்’’ என்றார்.
இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 40 மணிநேரம் கடந்த நிலையில், திங்கள்கிழமை காலையிலும் இஸ்ரேல் படையினர் தீவிரவாதிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசா பகுதியில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தமாக இரண்டு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1100-ஐ கடந்துள்ளது.
முன்னறிவிப்பில்லாமல் ஹமாஸ் தீவிவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் பலரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் இதுவரை காசாவில் 800க்கும் அதிமான இடங்களில் தாக்குல் நடத்தி இருப்பதாகவும், என்க்ளேவின் வடகிழக்கு மூலையான பெய்ட் ஹனோன் நரகம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே காசா பகுதியிலிருந்து 70,000 பாலஸ்தீனர்கள் வெளியேறி தாங்கள் நடத்தும் பள்ளிகளில் தஞ்சமைடந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. மேலும் காசா பகுதிகளுக்கு உணவு பொருள்கள் கொண்டு செல்ல மனிதாபிமான வழித்தடங்களை உருவக்க வேண்டும் என்றும் அது வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் காசா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்து ஒளிந்து கொண்ட 30 பேர் திரும்பி வந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இசைநிகழ்ச்சி நடந்த இடத்தில் 260 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், துப்பாக்கிச் சூட்டுக்கு நடுவில் இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் திறந்த வெளியில் ஓடுவது தெரிகிறது. பலர் அருகில் இருந்த பழத்தோட்டத்தில் பதுங்குகின்றனர் அல்லது தப்பிக்கும் போது சுட்டுக்கொல்லப்படுகின்றனர். ஹமாஸ் தீவிரவாதிகள் முதலில் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளனர்; பின்னர் துப்பாக்கியால் சுடத்தொடங்கியுள்ளனர்.
இஸ்ரேல் போர் பதற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘‘தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் கடமையும், உரிமையும் இஸ்ரேலுக்கு உள்ளது. தீவிரவாத தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்ய, அமெரிக்காவின் ஆதரவு கட்டாயம் உண்டு. இஸ்ரேலின் தேவை குறித்து கேட்டறியுமாறு அமெரிக்க பாதுகாப்பு குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு உதவும் விதமாக பல்வேறு ராணுவ கப்பல்களையும் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பும் என்று அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் லோயிட் அஸ்டின் தெரிவித்துள்ளார். இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரிசர்வ் வீரர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தலைவர் சையத் நக்ஹலா கூறுகையில், இஸ்ரேல் மீது காசா தீவிரவாதிகள் நடத்திய தாக்குலின் போது சிறைபிடிக்கப்பட்ட 30 இஸ்ரேலியர்களை தாங்கள் பிடித்துவைத்திருப்பதாகவும், இஸ்ரேலால் சிறைபிடிக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படும் வரை தங்கள் வசம் உள்ள கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏர் இந்தியா உட்பட பல்வேறு சர்வேதச விமான சேவை நிறுவனங்கள் டெல் அவிவ்க்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT