Published : 09 Oct 2023 11:29 AM
Last Updated : 09 Oct 2023 11:29 AM

''ஐஎஸ்ஐஎஸ், அல் கயிதா போன்றது ஹமாஸ்'': ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன்

ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் | கோப்புப் படம்

நியூயார்க்: பயங்கரவாத அமைப்புகளான ஐஎஸ்ஐஎஸ், அல் கயிதா போன்றது ஹமாஸ் அமைப்பு என்று ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை தொடங்கியதில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து இரு தரப்பிலும் ஆயிரத்து 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இஸ்ரேலுக்கு எதிரான போர் என்றும், இஸ்ரேல் தற்போது போரில் ஈடுபட்டு வருகிறது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐநா தலையைகத்தில் உரையாற்றிய ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன், "இன அழிப்பை மேற்கொள்ளும் பயங்கரவாத அமைப்பு ஹமாஸ். இன அழிப்பை மேற்கொள்ள அவர்களுக்கு காரணம் ஏதும் தேவையில்லை. பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வர மாட்டார்கள். யூதர்களை அழிப்பது மட்டுமே அவர்களின் ஒற்றைக் குறிக்கோள். முஸ்லிம்கள் யூதர்களை கொல்லாத வரை இறுதி தீர்ப்பு நாள் என்பது வராது; யூதர்களை பார்த்தால் அவர்களை முஸ்லிம்கள் கொல்ல வேண்டும் என ஹமாஸ் அமைப்பின் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் யூத மதத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்பட அனைவரையும் கொல்லத் துடிக்கிறார்கள். ஒரு யூதர் உயிரோடு இருக்கும் வரை அவர்கள் சண்டையை நிறுத்த மாட்டார்கள்.

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதைப் போன்றது இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் இந்த தாக்குதல். எங்கள் மகன்களும் மகள்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம். இன்று பல நாடுகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை வரலாறு எங்களுக்கு கற்றுத் தந்திருக்கிறது. இஸ்ரேல் விஷயத்தில் சர்வதேச சமூகத்துக்கு குறிப்பாக ஐநாவுக்கு நினைவுத்திறன் மிக குறைவு. இதற்கு முன் இருந்திராத பதிலடியை நாங்கள் கொடுப்போம். நாங்கள் சமநிலையை மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

17 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் தன்னிச்சையாக காசாவில் இருந்து விலகியது. அங்கு ஹமாஸ் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து அந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் இஸ்ரேலுக்கு எதிரான போருக்காகவே பயன்படுத்தப்படுகிறது. காசாவை சீரமைக்க சர்வதேச சமூகம் கோடிக்கணக்கில் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் நிதி உதவி அனைத்தும் அங்கு கல்வி நிலையங்களை ஏற்படுத்தவோ, மருத்துவமனைகளை கட்டவோ பயன்படுத்தப்படுவதில்லை. ஆயுதங்கள், சுரங்கப் பாதைகள், ராக்கெட் ஏவுதளம், ஏவுகணை உற்பத்தி ஆகிவற்றுக்காகவே அந்த நிதி உதவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிதி உதவிகள் ஹமாஸ் அமைப்பின் இன அழிப்பு சித்தாந்தத்தை மாற்றவில்லை. அந்த அமைப்புக்கும் ஐஎஸ்ஐஎஸ், அல் கயிதா அமைப்புகளுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

ஹமாஸ் ஏற்படுத்தி உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் இம்முறை முழுமையாக ஒழிக்கப்படும். மீண்டும் அவர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்த முடியாத நிலையை நாங்கள் அவர்களுக்கு ஏற்படுத்துவோம். இந்த மோதலில் இஸ்ரேல் முன்னணியில் இருக்கிறது. உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஏனெனில், இந்த போர் இஸ்ரேலுக்கானது மட்டுமல்ல; இது சுதந்திரமான உலகை உருவாக்குவதற்கானது. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெறாவிட்டால் உலகம் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x