Published : 09 Oct 2023 04:59 AM
Last Updated : 09 Oct 2023 04:59 AM
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹெராத் மாகாணம் உள்ளது. இந்த மாகாண தலைநகர் ஹெராத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் 12 மணி வரை அடுத்தடுத்து 4 முறை பூகம்பங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர்அலகில் 5.5, 5.9, 6.2, 6.3 என்றுபதிவாகின. தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகளும் ஏற்பட்டன.
இந்த பூகம்பத்தால் ஹெராத் பகுதியில் 12 கிராமங்கள் முழுமையாக நாசமாகின. 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐ.நா. சபை, செஞ்சிலுவை சங்கம்உள்ளிட்டவை மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் சார்பில் 5 தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செஞ்சிலுவை சங்கத்தின் செய்தி தொடர்பாளர் இர்பானுல்லா கூறும்போது, “எங்கள் அமைப்பின் 7 குழுக்கள் மீட்பு பணி, மருத்துவ சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வீடுகளை இழந்தோருக்காக தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளோம்’’ என்றார்.
ஐ.நா. சபை சார்பில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தோருக்காக உணவு வகைகள், தற்காலிக கூடாரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
உலக சுகாதார அமைப்பு சார்பில் அத்தியாவசிய மருந்து பொருட்கள் ஹெராத் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் கூறியதாவது:
ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மதம் சார்ந்தவிவகாரங்களில் மட்டுமே கவனம்செலுத்தப்படுகிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை. ஹெராத் பகுதியில் மக்கள், கையால் மண்ணை தோண்டி மீட்பு பணியில் ஈடுபடுவது பரிதாபமாக உள்ளது. மீட்பு பணியில் உள்ளதொய்வின் காரணமாக உயிரிழப்பு அதிகரித்திருக்கிறது.
ஐ.நா. சபை, செஞ்சிலுவைசங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபடாமல் இருந்திருந்தால் நிலைமைஇன்னும் மோசமாகி இருக்கும்.
ஹெராத் பகுதியில் மீண்டும் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதால், எச்சரிக்கையாக இருக்க மக்களை அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT