Published : 08 Oct 2023 05:32 AM
Last Updated : 08 Oct 2023 05:32 AM

ஹமாஸ் தாக்குதல் - இஸ்ரேல் ராணுவம் சபதம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியைத் தொடர்ந்து போருக்கான அவசர நிலையை இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. ‘‘இஸ்ரேல் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் நோக்கி ராக்கெட் குண்டுகள் வீசப்படுகின்றன.

இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து நாட்டை பாதுகாக்கும். இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகளை ஒரே நாளில் முழுவதுமாக ஒழித்துவிடுவோம்’’ என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்டு ஹெக்ட் அளித்த பேட்டியில், ‘‘இஸ்ரேலில் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளோம். காசா எல்லை பகுதி, ராணுவ முகாம்கள் மற்றும் பல கிராமங்களில் நாங்கள் போரிட்டு வருகிறோம்’’ என்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘‘இஸ்ரேல் மக்கள் மீது பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கிறது. இஸ்ரேல் அரசுக்கும், மக்களுக்கும் அமெரிக்கா துணை நிற்கிறது’’ என்றார்.

இதேபோல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உட்பட பலர் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என சவுதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்திய பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ், ‘‘ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை பாலஸ்தீன மக்களுக்கு உள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு தேவையான பாதுகாப்பை அதிகாரிகள் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலன்ட் கூறும்போது, ‘‘இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் மிகப் பெரிய தவறை ஹமாஸ் தீவிரவாதிகள் செய்துவிட்டனர். அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் அனைத்து இடங்களிலும் போராடி வருகிறது’’ என்றார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் - பிரேசில் அழைப்பு: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தற்போது பிரேசில் தலைமை வகிக்கிறது. இஸ்ரேல் மீதான தாக்குதலை அடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுப்போம் என பிரசேில் கூறியுள்ளது. பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பிரேசில் கண்டனம் தெரிவிக்கிறது. இஸ்ரேல் மக்களுக்கு பிரேசில் துணை நிற்கும். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டும்’’ என கூறியுள்ளது.

ஹமாஸ் கமாண்டர் அழைப்பு: பாலஸ்தீன மக்களுக்கு ஹமாஸ் கமாண்டர் முகமது அல்-தேப் விடுத்துள்ள வேண்டுகோளில், ‘‘உங்களிடம் துப்பாக்கி இருந்தால், அதை எடுத்துக் கொண்டு போருக்கு செல்லுங்கள். துப்பாக்கிகளை பயன்படுத்த இதுதான் சரியான நேரம். உங்களிடம் உள்ள வாகனங்களை எடுத்துக் கொண்டு போருக்கு செல்லுங்கள். மிக முக்கியமான வரலாறு இன்று தொடங்குகிறது’’ என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x