Published : 04 Oct 2023 06:38 AM
Last Updated : 04 Oct 2023 06:38 AM

3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி,பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 2-ம் தேதி முதல் அறிவிக்கப்படுகிறது. முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ட்ரூ வெய்ஸ்மேன், கட்டாலின் கரிக்கோவுக்கு அறிவிக்கப்பட்டது.

2-ம் நாளான் நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதன்படி அமெரிக்காவின் ஒகையோ மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் பியர்லி அகோஸ்டினி, ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் பெரன்க் க்ரவுஸ், ஸ்வீடனின் லூண்ட்பல்கலைக்கழக பேராசிரியர் ஆனிஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானி களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அணுவுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளஉதவும் மிக குறுகிய அதிர்வுகொண்ட ஒளியை உருவாக்குவது தொடர்பான ஆய்வில் பியர்லி அகோஸ்டினி, பெரன்க் க்ரவுஸ்,ஆனிஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் எலக்ட்ரான்களின் நகர்வை மிகத் துல்லியமாக கணக்கிட முடியும்.

எலக்ட்ரான்களை பொறுத்த வரை அட்டோசெகன்ட் பொழுதில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அட்டோ செகன்ட் என்பது ஒரு விநாடியில் மிக, மிகச் சிறிய பகுதியாகும். மூன்று விஞ்ஞானிகளின் ஆய்வால்அட்டோசெகன்ட் பொழுதில் எலக்ட்ரான்களில் ஏற்படும் மாற்றத்தை மிகத் துல்லியமாக கணக்கிட முடியும். இதன்மூலம் எலக்ட்ரான்களின் உலகத்தில் நுழைவதற்கான கதவு திறந்திருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 3 விஞ்ஞானிகளுக்கு ரூ.8.30 கோடி ரொக்கம் பகிர்ந்து அளிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x