Published : 03 Oct 2023 04:19 AM
Last Updated : 03 Oct 2023 04:19 AM
புதுடெல்லி: உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது.
ஃபின்ஏர், ஃபின்னிஸ் போலீஸ் மற்றும் ஃபின்ஏவியா விமான நிலைய ஆபரேட்டருடன் இணைந்து கடந்த ஆக.28-ம் தேதி டிஜிட்டல் பாஸ்போர்ட்டுக்கான ஒரு பைலட் திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கியது.
பயண தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த டிஜிட்டல் பாஸ்போர்ட்களை சோதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.
முதலில் இந்த திட்டம் ஹெல்சின்கியில் இருந்து இங்கிலாந்து திரும்பும் சில ஃபின்ஏர் விமான பயணிகளிடம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஃபின்டிசிசி பைலட் செயலியை பதிவிறக்கம் செய்து பயணிகள் தங்கள் முக அங்கீகாரம் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளை சரிபார்க்க வேண்டும். பின்னர், ஃபின்னிஸ் எல்லை காவலருக்கு செயலி மூலம் இந்த தகவல்களை அவர்கள் அனுப்ப வேண்டும்.
டிஜிட்டல் பாஸ்போர்ட் என்பது மொபைல் செயலியை அடிப்படையாக கொண்டது. இது, பயணிகள் தங்கள் பாஸ்போர்ட் தகவல்களை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. தனியாக பாஸ்போர்ட் புத்தகங்களை உடன் எடுத்துச் செல்ல தேவையில்லை.
எளிது, வேகம், பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டம் சோதனை அடிப்படையில் பிப்ரவரி 2024 வரை செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு, இத்திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பின்லாந்து தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அனைவருக்கும் அவசியமானதாக மாறியுள்ளதால் எதிர்காலத்தில் டிஜிட்டல் பாஸ்போர்ட் எல்லா நாடுகளிலும் பிரபலமாகும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...