Published : 29 Sep 2023 09:14 AM
Last Updated : 29 Sep 2023 09:14 AM

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கனுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: கனடா பிரச்சினையில் மவுனம்

ஜெய்சங்கர், ஆண்டனி பிளின்கன்

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்த நிலையில் கனடா பிரச்சினை குறித்து இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மவுனம் காத்தது கவனம் பெற்றுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜார் கொலையால் இந்தியா - கனடா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் அமெரிக்கா சென்ற வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை சந்தித்தார்.

தனது அண்டை நாடான கனடாவும், தெற்காசியப் பிராந்தியத்தில் முக்கியமான நாடாக விளங்கும், அதுவும் குறிப்பாக சீனாவை எதிர்கொள்ள முக்கிய பங்காளியாக இருக்கும் இந்தியாவும் உரசலில் உள்ள சூழலில் அமெரிக்கா இந்தச் சர்ச்சையில் மிகக் கவனமாக செயல்படும் நிர்பந்தத்தில் உள்ளது.

இந்தச் சூழலில் அமெரிக்க - இந்திய வெளியுறவு அமைச்சர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை சர்ச்சை பற்றி எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இருவர் தனிப்பட்ட முறையில் ஆலோசித்தபோது விசாரணையில் கனடாவுக்கு உதவ வேண்டும் என்று இந்தியாவுக்கு பிளின்கன் அறிவுறுத்தியதாக பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு குறித்துப் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "நாங்கள் தொடர்ச்சியாக இந்தியாவுடன் இவ்விவகாரம் பற்றிப் பேசி வருகிறோம். விசாரணையில் கனடாவுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.

இரு நாட்டு அமைச்சர்கள் சந்திப்பின்போது இந்தியாவின் ஜி-20 தலைமையேற்பு, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார வழித்தடம் உருவாக்குதல் ஆகியன குறித்து பிளின்கனும், ஜெய்சங்கரும் பேசினர், இந்த வழித்தடத்தை உருவாக்குவதில் வெளிப்படையான, நீடித்த, உயர் தர கட்டமைப்பு முதலீடுகள் பற்றி ஆலோசித்தனர்" என்றார்.

முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது, "நிஜார் கொலை வழக்கு விசாரணையில் எங்களுடன் ஒத்துழைக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கன் வலியுறுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையில் அமெரிக்கர்கள் எங்களுடன் துணை நிற்கின்றனர். கனடா மண்ணில் கனடா குடியுரிமை பெற்ற நபரை இந்திய அரசாங்கம் அதன் முகவர்கள் மூலம் கொலை செய்த பிரச்சினையில் எங்களுடன் துணை நிற்பது எவ்வளவு முக்கியம் என்பதை அமெரிக்கா உணர்ந்திருக்கிறது" என்று கூறியிருந்தார்.

ஆனால், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்த நிலையில் கனடா பிரச்சினை குறித்து இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மவுனம் காத்தது கவனம் பெற்றுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர், கனடாவா இந்தியாவா என்று வந்தால் அமெரிக்காவுக்கு இந்தியாவின் உறவைப் பேணுவதே முக்கியமாக இருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கனடா - இந்தியா மோதல் பின்னணி: கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேறஉத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனட அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதனாலேயே கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x