Published : 20 Sep 2023 12:20 AM
Last Updated : 20 Sep 2023 12:20 AM
லாகூர்: இந்தியா நிலவை அடைந்துவிட்ட சூழலில், உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றியபோது இதனை தெரிவித்தார் நவாஸ் ஷெரீப். மேலும் அவர், "இந்தியா நிலவை அடைந்துவிட்டது, ஜி20 கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதேநேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் நாடு, நாடகச் சென்று நிதிக்காக கையேந்திக் கொண்டிருக்கிறார்.
இந்தியா செய்த சாதனைகளைப் பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை. இதற்கெல்லாம் இங்கு யார் பொறுப்பு" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசுகையில், "அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமரானபோது, இந்தியாவிடம் பில்லியன் டாலர் மட்டுமே இருந்தது. தற்போது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 600 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியா இன்றைக்கு எங்கேயோ சென்றுவிட்டது. ஆனால், பாகிஸ்தான் உலக நாடுகளிடம் நிதிக்காக கையேந்திக் கொண்டிருக்கிறது" என்று பேசினார்.
கரோனா காலகட்டத்துக்குப் பிறகு பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஷெபாஷ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்ற பின்னும், சீரான பொருளாதார நிலையை பாகிஸ்தானால் எட்ட முடியவில்லை. இதன்தொடர்ச்சியாகவே நவாஸ் ஷெரீப் கடுமையான விமர்சனங்களை ஷெபாஷ் ஷெரீப் அரசின்மீது முன்வைத்துள்ளார்.
2019-ல், அல்அஜிசியா மில் ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று தற்போது மருத்துவக் காரணங்களுக்காக லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப் வரும் அக்டோபர் 21-ம் தேதி நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் நவம்பர் 6-ம் தேதியை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார் நவாஸ் ஷெரீப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT