Published : 15 Sep 2023 01:24 PM
Last Updated : 15 Sep 2023 01:24 PM

பயனர்களுக்கு தெரியாமல் லொகேஷனை டிராக் செய்த கூகுள்: ரூ.700 கோடி அபராதம் விதிப்பு

கோப்புப்படம்

கலிபோர்னியா: பயனர்களுக்கு தெரியாமல் இருப்பிடம் (லொகேஷன்) குறித்த விவரங்களை சேகரித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.700 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்த வழக்கில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக கூகுள் நிறுவனம் பயனர்களின் இருப்பிடம் சார்ந்த விவரங்களை சேகரிப்பது வழக்கம். அதற்கு பயனர்கள் லொகேஷன் அம்சத்தை ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு சேவைகளை பயனர்கள் பெற முடியும். இருப்பினும் பிரைவசி உட்பட பல்வேறு காரணங்களுக்காக பயனர்கள் லொகேஷனை ஆஃப் செய்திருப்பார்கள். இப்படி லொகேஷன் அக்சஸை ஆஃப் செய்த பயனர்களின் இருப்பிட விவரம் சேகரிக்கப்படாது என கூகுள் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கூகுளின் ஆண்ட்ராய்டு போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லொகேஷனை ஆஃப் செய்த பயனர்களின் இருப்பிட விவரம் சார்ந்த தரவுகளை கூகுள் சேகரித்ததாக சொல்லி அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது. கூகுளின் வெப் சேவையை பயனர்கள் பயன்படுத்தும் போது அதன் மூலம் லொகேஷன் சார்ந்த தரவுகள் மாற்று வழியில் பயனர்களுக்கு தெரியாமல் சேகரிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

இது உறுதி செய்யப்பட்ட காரணத்தால் கூகுளுக்கு 93 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை கூகுள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேம்படுத்தப்பட்ட புராடெக்ட் கொள்கை மூலம் இதற்கு தீர்வு கண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த அபராதத்தை செலுத்த கூகுள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல். பயனர்களுக்கு தெரியாமல் தரவுகளை சேகரித்த விவகாரத்தில் மெட்டா நிறுவனமும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x