Published : 07 Sep 2023 12:49 PM
Last Updated : 07 Sep 2023 12:49 PM
ஜகர்தா: 21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. நமது இந்த நூற்றாண்டில் கோவிட் 19-க்கு பிந்தைய ஓர் உலக ஒழுங்கு தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ஆசியான்(தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) - இந்தியா இடையிலான ஒத்துழைப்பினை ஊக்குவிப்பதற்காக 12 அம்ச திட்டத்தினையும் முன்மொழிந்தார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் நடைபெறும் ஆசியான் இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "தெற்குலகில் குரலை உரக்க ஒலிக்கச் செய்வதிலும், சுதந்திரமான இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதிலும் இருதரப்புக்கும் ஆர்வம் உள்ளது. இந்த இலக்கினை அடைவதை நோக்கி அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது. 21ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. இது நமது நூற்றாண்டு. அதற்கு கோவிட் 19-க்கு பிந்தைய உலக ஒழுங்கின் அடிப்படையிலான விதிகளை உருவாக்குவது அவசியம். தெற்கின் குரலை அதிகப்படுத்துவதில் நம் அனைவருக்கும் பொதுவான ஆர்வம் உள்ளது.
உலகின் நிச்சயமற்ற சூழ்நிலையிலும், ஆசியான் இந்தியாவின் உறவு ஒவ்வொரு துறையிலும் நிலையான வளச்சியை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் 10 ஆசிய நாடுகளும் வரலாறு, புவியியல், பகிரப்படும் மதிப்புகள், அமைதி, வளமை போன்ற பல்வேறு காரணிகளால் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு கொள்கையின் மையத்தூணே ஆசியான்தான். ஆசியானின் மையத்தையும், இந்தோ பசிபிக் மீதான அதன் பார்வையையும் இந்தியா முழுமையாக ஏற்கிறது" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து, ஆசியான் -இந்தியா ஒத்துழைப்பிணை வலுப்படுத்துவதற்காக 12 அம்ச திட்டத்தை முன்மொழிந்தார். இது, டிபிஐ (டிஜிட்டல் பப்ளிக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்) இணைப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது இந்தியா,தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவை பல்வேறு முன்மாதிரிகளிலும் பொருளாதாரத்திலும் இணைப்பதை நோக்கமாக கொண்டது.
இந்தத் திட்டங்களின் படி, இந்தியா தனது டிபிஐ நிபுணத்துவத்தை ஏசியான் நண்பர்களுடன் பரிகிந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்து, ஏசியான் -இந்தியா "ஃபண்ட் ஃபார் டிஜிட்டல் ஃபியூச்சர்" என்ற ஒன்றை அறிவித்துள்ளது. மேலும், ஏசியான் மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தனது ஆதரவினை புதுப்பிக்க இருக்கிறது. அதேபோல், பலதரப்பட்ட அமைப்புகளில் தெற்கின் குரலை எழுப்புவதற்கு அழைப்பு விடுத்துள்ள இந்தியா, ஜன் அவுஷாதி கேந்திராக்கள் மூலமாக மலிவு விலை மற்றும் தரமான மருந்துகள் கிடைக்க தனது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல்,பயங்கரவாதம், பயங்கரவாத குழுக்குகளுக்கு நிதியுதவி அளித்தல், இணையவழி தவறான தகவல் பரப்புதல் ஆகியவைகளுக்கு எதிரான போராட்டம், பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பு, கடல் சார் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுகளில் ஒத்துழைப்பு ஆகியவை முன்மொழியப்பட்ட திட்டத்தில் உள்ள மற்ற அம்சங்களாகும்.
ஜி-20 உச்சி மாநாடு இந்த வார இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் நடைபெறும் ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜகர்தா சென்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT