Published : 06 Sep 2023 12:00 PM
Last Updated : 06 Sep 2023 12:00 PM

சமூக வலைதளத்தில் வைரலாக வேண்டி உலகின் காரமான சிப்ஸ் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

பாஸ்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர், சமூக வலைதள சவால் ஒன்றில் பங்கேற்க வேண்டி உலகின் மிகவும் காரமான சிப்ஸை சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

சமீபத்தில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ’ஒன் சிப் சேலஞ்ச்’ என்ற சவால் ஒன்று டிரெண்ட் ஆகி வருகிறது. இதில் 'பாகுய் (Paqui) என்ற உலகின் மிக காரமான சிப்ஸ் ஒன்றை சாப்பிட்டு அதனை வீடியொவாக பதிவு செய்து பகிர வேண்டும். இந்த சிப்ஸ் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சாப்பிடும் வகையில் மிக அதிகமான காரத்துடன் உருவாக்கப்பட்டது. நாம் உணவில் சேர்க்கும் வழக்கமான காரத்தை காட்டிலும் இது பலமடங்கு அதிகம் காரமானது. அந்த சிப்ஸின் பாக்கெட்டிலேயே அதன் பக்கவிளைவுகள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்.

அமெரிக்காவின் நேஷனல் கேபிடல் பாய்சன் சென்டர் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த சிப்ஸில் கேப்சைசின் (Capsaicin) உள்ளது... இதனை உட்கொள்ளும்போது வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் கடுமையான எரிச்சல் மற்றும் வலியை ஏற்படும் என்றும், மாரடைப்பு மற்றும் உணவுக்குழாய் சேதம் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த. ஹாரிஸ் வாலோபா என்ற 14 வயது சிறுவன், இந்த ‘ஒன் சிப் சேலஞ்ச்’ டிரெண்டில் பங்கேற்று வைரலாக விரும்பி இந்த சிப்ஸை தனது பள்ளியில் சாப்பிட்டுள்ளார். இதனால் சில நொடிகளிலேயே கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார். உடனடியாக ஆசிரியர்கள் அளித்த தகவலின் பேரில் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போகும் வழியிலேயே மயக்கமடைந்த ஹாரிஸை, மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுவன் ஹாரிஸின் தாய் லூயிஸ், தனது மகனின் இறப்புக்கு அவர் உட்கொண்ட காரமான சிப்ஸ் தான் காரணம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x