Published : 06 Sep 2023 09:15 AM
Last Updated : 06 Sep 2023 09:15 AM
டோக்கியோ: சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள்கள் உள்ளன. இதில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியை போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் நெப்டியூன் கோளை தாண்டி பூமியை போன்ற புதிய கிரகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக ஜப்பானின் கிண்டாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் சோபியா லைகாகா, ஜப்பானின் தேசிய விண்வெளி கண்காணிப்பு மையத்தை சேர்ந்த தகாஷி இட்டோ ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைப்பர் பட்டை என்று அழைக்கப்படுகிறது. இது பனிப்பொருட்களை கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள குறுங்கோள்கள் தண்ணீர், மீத்தேன், அமோனியாவால் ஆனவை.
இந்த கைப்பர் பட்டை பகுதியில் பூமி போன்ற கிரகம் இருக்கிறது. இது எங்களது கணிப்பு மட்டுமே. இதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். சூரிய குடும்பத்தில் 9-வது கிரகம் மறைந்திருக்கிறது. அந்த கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர். நாங்கள் கண்டுபிடித்திருப்பது சர்வதேச விஞ்ஞானிகள் கூறி வரும் 9-வது கிரகம் கிடையாது. இது வேறு ஒரு புதிய கிரகம் என்று கருதுகிறோம். சூரிய குடும்பத்தின் எல்லையில் இந்த கிரகம் இருக்கிறது.
சூரியனில் இருந்து பூமி, 94 வானியல் அலகு தொலைவிலும் சூரியனில் இருந்து புதிய கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவிலும் இருக்கிறது. இந்த கிரகம் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT