Last Updated : 02 Dec, 2017 03:33 PM

 

Published : 02 Dec 2017 03:33 PM
Last Updated : 02 Dec 2017 03:33 PM

பாலியல் பலாத்காரத்தைத் தடுக்க தற்காப்புக் கொலை: 51 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட சின்டோபியாவுக்கு ஆதரவாக ஹாலிவுட் பிரபலங்கள்

''அவன் துப்பாக்கியைத் தேடுவதாக நான் நினைத்தேன். அதனால் நான் பதற்றமடையத் தொடங்கினேன். அவன் என்னை கொல்லப் போகிறான், அல்லது பலாத்காரம் செய்யப் போவதாக எனக்குத் தோன்றியது.  அதனால் அவனை நான் துப்பாக்கியால் சுட்டேன்.

இதெல்லாம் ஒரு நொடியில் நிகழ்ந்துவிட்டது. எனக்கு நான் என்ன செய்திருக்கிருகிறேன் என்று என்றே ஒரு கணம் புரியவில்லை. அவன் உடலிலிருந்து ரத்தம் வெளியேறியதைப் பார்த்த பிறகுதான் நான் அவனை துப்பாக்கியால் சுட்டதை உணர்ந்தேன்''

2004-ம் ஆண்டு 16 வயதான சின்டோனியா ப்ரவுன் போலீஸாருக்கு அளித்த வாக்குமூலம் இது.

தற்போது 29 வயதாகியுள்ள சின்டோனியா ப்ரவுனின் விடுதலைக்காக ஹாலிவுட் பிரபலங்கள் பலர் கடந்த சில நாட்களாக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ரிகானா, கேரா டெலிவின்ங்னே, கிம் கர்தாஷியன் என சின்டோனியாவின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

யார் இந்த சின்டோனியா?

அமெரிக்காவைச் சேர்ந்த சின்டோனியா அவரது காதலரால் பாலியல் தொழிலாளியாக விற்கப்பட்டார். தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சின்டோனியா ஒரு கட்டத்தில் தன்னை பலாத்காரம் செய்ய முற்பட்ட 43 வயதான மிட்டெல் அலனை தன்னை தற்காத்துக் கொள்ள துப்பாக்கியால் சுடுகிறார்.

இதில் கைது செய்யப்பட்ட சின்டோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் 51 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

தற்போது 29 வயதாகும் சின்டோனியா தனது 69 வயதுவரை தொடந்து தனது சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இந்நிலையில் டென்னிசி சிறையிலேயே தனது இளம் நிலை பட்டப்படிப்பை முடித்திருக்கிறார் சின்டோனியா.

சமீபத்தில் அவர் வழக்கு தொடர்பான தகவல் பத்திரிகைகளில் வெளியாகியது.  இதனைத் தொடர்ந்துதான் #FreeCyntoiaBrown என்ற ஷாஸ்டேக்குடன் ஆதரவு குரல்கள் எழுந்தன.

கிம் கர்தாஷியன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சட்டம் தோற்றுவிட்டது. ஒரு சிறுமி பாலியல் தொழிலாளியாக விற்கப்பட்டதற்கு எதிராக துணிச்சலாக போராடியதற்காக அவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டிருப்பது மனதை வேதனைப்படுத்துகிறது. இதனை சரி செய்ய வேண்டும்'' என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சின்டோனியாவுக்கு ஆதரவாக பலரும் கைகோக்க தொடங்கினர். தற்காப்புக்காகத்தான் சின்டோனியா இந்தக் கொலையைச் செய்தார். அவரை விடுதலை செய்யக் கோரி பிரபலங்களும் அவரது சொந்த ஊர் மக்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சின்டோனியா விடுதலை தொடர்பாக அமெரிக்கச் சட்டம் என்ன செய்ய உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x