Published : 27 Aug 2023 02:01 PM
Last Updated : 27 Aug 2023 02:01 PM
டோக்யோ: புகுஷிமா அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கடல்நீரில் எந்தவித கதிரியக்கமும் கண்டறியப்படவில்லை என்று ஜப்பான் அரசு விளக்கமளித்துள்ளது.
ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை அந்நாட்டு அரசு சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றியது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து ஜப்பானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகளுக்கு சீனா தடை விதித்தது. புகுஷிமா அணு உலையை சுற்றியுள்ள கடல்நீரில் கதிரியக்க அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சீன சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அணு உலைகளை குளிர்விக்கப் பயன்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்றிய பிறகு நடத்தப்பட்ட சோதனையில், புகுஷிமா அணுமின் நிலையத்திற்கு அருகே கடல்நீரில் எந்தவித கதிரியக்கமும் (Radioactivity) கண்டறியப்படவில்லை என்று ஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்திய இந்த சோதனையில் ஆலைக்கு அருகில் உள்ள 11 இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இந்த சோதனையின் முடிவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கடல் நீர் மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அடுத்த மூன்று மாதங்களுக்கு சோதனை முடிவுகள் வாரந்தோறும் வெளியிடப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் மீன்வளத் துறை அமைச்சகம் நேற்று (ஆக 26), வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு உலையைச் சுற்றியுள்ள நீரில் உள்ள மீன்களில் டிரிடியம் கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளது.
முன்னதாக: ஜப்பான் நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மிகப்பெரிய சுனாமி அலைகளால் புகுஷிமா அணு உலைக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அணு உலையின் மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் சேதமடைந்தன.
இந்த பாதிப்பை சரிசெய்ய குளிரூட்டும் அமைப்புக்குள் கோடிக்கணக்கான லிட்டர் கடல்நீர் மற்றும் போரிக் அமிலம் செலுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட கதிரியக்க கழிவு நீர் ஆயிரக்கணக்கான தொட்டிகளில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேமிக்கப்பட்ட அந்த கழிவு நீரைத்தான் கடும் எதிர்ப்புகளை மீறி தற்போது ஜப்பான் அரசு கடலில் வெளியேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT