Published : 26 Aug 2023 03:17 PM
Last Updated : 26 Aug 2023 03:17 PM
இஸ்லாமாபாத்: சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி என்பது ஒரு மகத்தான அறிவியல் சாதனை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச் புகழாரம் சூட்டியுள்ளார்.
நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரையிறங்கிய ரோவர் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை உலகின் பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றன.
இந்தியா வெற்றி பெறும் தருணங்களில் அமைதி காக்கும் வழக்கத்தைக் கொண்ட பாகிஸ்தான், இம்முறை இந்தியாவிற்குக் கிடைத்த இந்த வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 வெற்றி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச், "இது ஒரு மகத்தான அறிவியல் சாதனை; இதனை சாதித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டுக்கு உரியவர்கள்" எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பத்திரிகைகளும் சந்திரயான்-3 வெற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன. டான் பத்திரிகை வெளியிட்டுள்ள தலையங்கத்தில், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது என குறிப்பிட்டுள்ளது. மேலும், "பணக்கார நாடுகள் பெரிய தொகையை செலவழித்து சாதித்ததை, குறைந்த பட்ஜெட்டில் இந்தியா சாதித்துள்ளது. இது பாராட்டுக்குரியது. விண்வெளி ஆய்வுக்கு அரசு அளித்து வரும் தொடர் ஆதரவைத் தாண்டி, இந்த கடினமான திட்டம் வெற்றி பெற்றிருப்பதற்கு இஸ்ரோவின் தரமான, அர்ப்பணிப்புடன் கூடிய விஞ்சானிகள்தான் காரணம்.
ஒப்பீடுகள் உண்மையில் வெறுக்கத்தக்கவை. ஆனால், இந்தியாவின் விண்வெளி வெற்றியிலிருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இந்தியாவுக்கு முன் பாகிஸ்தானின் விண்வெளித் திட்டம் தொடங்கப்பட்டது. அது ஓரளவு வெற்றிகரமாகவும் செயல்பட்டுள்ளது" என்றும் ‘டான்’ தெரிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், "நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்வெளித் திட்டங்கள் தவறிய நிலையில், இந்தியா அதனைச் சாதித்துள்ளது. இதுவரை இல்லாத குறைந்த செலவில் சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்-2 திட்டத்திற்கு 117 மில்லியன் டாலர் செலவிடப்பட்டது. ஆனால், சந்திரயான்-3 திட்டம் 75-90 மில்லியன் டாலரில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவதார்-2 உள்ளிட்ட சில திரைப்படங்களின் பட்ஜெட் கூட இதைவிட அதிகம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3-ன் வெற்றியை பாகிஸ்தானின் தகவல் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஃபாவெத் சவுத்ரி பாராட்டி உள்ளார். பாகிஸ்தானின் சமூக ஊடகங்களிலும் ஏராளமான பாகிஸ்தானியர்கள் சந்திரயான்-3ன் வெற்றியை பாராட்டி உள்ளனர். அதோடு, விண்வெளி ஆய்வில் பாகிஸ்தான் மந்தமாக உள்ளதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT