Published : 25 Aug 2023 10:58 AM
Last Updated : 25 Aug 2023 10:58 AM

கிரீஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஏதென்ஸ்: ஒரு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.

தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் அங்கிருந்து இன்று கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் சென்றடைந்தார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். மேலும், அந்நாட்டின் பல்வேறு உயர் அதிகாரிகளும் பிரதமரை வரவேற்றனர்.

மேலும், கிரீஸ் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் அதிக அளவில் திரண்டு பிரதமரை வரவேற்றனர். இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வதாகவும், பிரதமரை வரவேற்பதில் மகழ்ச்சி அடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இரு நாட்டு பிரதமர்கள் இடையேயான பேச்சுவார்த்தை, வர்த்தகத்திற்கும், இடம் பெயர்ந்த மக்களுக்கும் நன்மை பயக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பிரதமரின் ஏதென்ஸ் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "ஏதென்சில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர், கிரீஸ் அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும், அங்குள்ள தொழிற்துறையினரையும் பிரதமர் சந்திக்க உள்ளார். ஏதென்ஸில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக, அங்குள்ள இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து அவர்களோடு உரையாட உள்ளார்" என தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியாவில் இருந்து புறப்படும் முன்பாக தனது கிரீஸ் பயணம் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி, "கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் அழைப்பின் பேரில் ஏதென்ஸ் நகருக்குச் செல்கிறேன். இந்தப் பழமைவாய்ந்த பூமிக்கு நான் செல்வது இதுவே முதல் முறை. 40 ஆண்டுகளுக்குப் பின் கிரீஸ் செல்லும் முதலாவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையும் எனக்கு உண்டு. நமது இரு நாகரிகங்களுக்கிடையிலான தொடர்புகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலானவை. நவீன காலத்தில், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்முகத்தன்மை ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளால் நமது உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம், மக்களுக்கு இடையிலான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு இரு நாடுகளையும் நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. கிரேக்கத்திற்கான எனது பயணம் நமது பன்முக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x