Published : 25 Aug 2023 08:32 AM
Last Updated : 25 Aug 2023 08:32 AM
ஜோகன்னஸ்பர்க்: சீனாவும் இந்தியாவும் எல்லைப் பிரச்சினையை சரியாகக் கையாள வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், "தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சுருக்கமாக உரையாடினர். மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, சீனாவும் இந்தியாவும் உறவுகளின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் எல்லைப் பிரச்சினையை சரியாக கையாள வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "சீனா-இந்தியா உறவுகளை மேம்படுத்துவது இரு நாடுகளுக்கும் மக்களின் பொது நலன்களுக்கும் சேவை செய்வதோடு, உலகத்திலும், பிராந்தியத்திலும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அதிபர் ஜி குறிப்பிட்டார். இரு நாடுகளுமே, இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த நலன்களை மனதில் கொள்ள வேண்டும். எல்லைப் பகுதியில் அமைதியும் நிலையான தன்மையும் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் எல்லைப் பிரச்சினையை சரியாக கையாள வேண்டும் என்று ஜி ஜின்பிங் கூறினார்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு நடந்தது குறித்து இரு தரப்பும் நேற்றுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. அதேநேரத்தில், இரு தலைவர்களுக்கு இடையேயான உரையாடலுக்குப் பிறகு, எல்லையில் துருப்புகளை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடவும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது என்று வெளியுறவுத்துறை செயலர் வினய் க்வத்ரா நேற்று(வியாழக்கிழமை) தெரிவித்தார்.
கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலில் லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இதனையடுத்து, 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக முதல்முறையாகப் பேசினர். அப்போது, இந்திய-சீன எல்லைப் பகுதிகளின் மேற்குப் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கவலைகளை பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் எடுத்துரைத்ததாக வினய் க்வத்ரா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT