Published : 23 Aug 2023 07:44 AM
Last Updated : 23 Aug 2023 07:44 AM
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் உள்ளார்.
சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் அடுத்த மாதம் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66) மற்றும் இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் 3 பேரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. செப்டம்பர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 27 லட்சம் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முதல்முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 10 நகரங்களில் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
தர்மன் சண்முகரத்னம் யார்? இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும்இங் கொக் சொங் கடந்த 1970-ம்ஆண்டில் சிங்கப்பூர் அரசின் நிதியமைச்சக முதலீட்டு ஆய்வாளராகப் பணியை தொடங்கினார். கடந்த 2007-ம் ஆண்டில் ஜிஐசி என்றழைக்கப்படும் சிங்கப்பூர் அரசின்முதலீட்டு நிறுவனத்தின் தலைமைஅதிகாரியாக பதவியேற்றார். கடந்த2013-ல் ஓய்வு பெறும் வரை அந்த பதவியை வகித்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் நெருங்கிய நண்பர் ஆவார்.
மற்றொரு வேட்பாளர் டான் கின்லியான் சுமார் 30 ஆண்டுகள் என்டியுசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்தார். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் இருக்கிறார். சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்றவர் என்பதால் சிங்கப்பூரின் அடுத்த அதிபராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற 2 வேட்பாளர்களும் சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT