Published : 23 Aug 2023 06:45 AM
Last Updated : 23 Aug 2023 06:45 AM

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றார் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச வாய்ப்பு

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு நேற்று வந்த பிரதமர் மோடிக்கு, அங்குள்ள இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜோகன்னஸ்பர்க்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜோகன்னஸ்பர்க் நகரில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசி, எல்லை பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் 15-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது.

கரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இம்மாநாடு காணொலியில் நடந்தது. கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கின்றனர். ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

மோடிக்கு உற்சாக வரவேற்பு: இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு சென்றார். அங்கு உள்ள வாட்டர்க்ளூஃப் விமானப் படை தளத்தில் தரையிறங்கிய மோடிக்கு அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க துணை அதிபர் பால் ஷிபோகோசா மஷாடைல் அவரை வரவேற்றார்.

தொடர்ந்து, ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல், பிரிக்ஸ் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

மாநாடு நாளை வரை நடைபெறுகிறது. இதில், பிரிக்ஸ் அமைப்பைவிரிவுபடுத்தி, ஈரான், வங்கதேசம் ஆகிய நாடுகளையும் உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ஜின்பிங்கை சந்திப்பாரா?: இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியா தலைமையில் டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, மீண்டும் சுமுக உறவை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க பயணத்துக்கு முன்பு, செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது: எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய துறைகள் மற்றும் அமைப்பு சார்ந்த வளர்ச்சியை மறுஆய்வு செய்ய பிரிக்ஸ் உச்சி மாநாடு பயனுள்ள வாய்ப்பை வழங்கும். வளர்ச்சியின் தேவைகள், பன்முகஅமைப்புகளின் சீர்திருத்தம் உட்படதெற்கத்திய நாடுகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பதற்கான தளமாக பிரிக்ஸ் அமைப்பை நாங்கள் கருதுகிறோம்.

இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுடன் கலந்துரையாட ஆவலாக உள்ளேன். மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் பிரிக்ஸ் - ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்விலும் பங்கேற்கிறேன். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளேன். ஜோகன்னஸ்பர்க்கில் சில தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதையும் எதிர்நோக்கியுள்ளேன்.

கிரீஸ் பயணம்: கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பின்பேரில், ஏதென்ஸ் நகருக்கு வரும் 25-ம் தேதி செல்கிறேன். பழமைவாய்ந்த கிரீஸ் நாட்டுக்கு நான் செல்வது இதுவே முதல்முறை. 40 ஆண்டுகளுக்கு பிறகு கிரீஸ் செல்லும் முதலாவது இந்திய பிரதமர் என்ற பெருமையும் எனக்கு கிடைக்கும்.

இந்திய - கிரேக்க நாகரிகங்களுக்கு இடையிலான தொடர்புகள் 2,000 ஆண்டுகளுக்கு மேலானவை. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் மக்கள் இடையிலான தொடர்புகள் போன்றவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படுவது இரு நாடுகளையும் நெருக்கமாக கொண்டுவந்துள்ளது. கிரீஸ் நாட்டுக்கு நான் செல்வது, நமது பன்முக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கிவைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x