Published : 21 Aug 2023 05:10 AM
Last Updated : 21 Aug 2023 05:10 AM
மாஸ்கோ: நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரை இறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது.
நிலவுக்கு ரஷ்யா கடந்த 1976-ம் ஆண்டு லூனா-24 என்ற விண்கலத்தை அனுப்பியது. அதன்பின்னர், 47 ஆண்டுகள் கழித்து, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 11-ம் தேதி சோயுஸ் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பியது. திறன்மிக்க உந்துவிசை இன்ஜின் பொருத்தப்பட்டிருந்ததால், பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதைகளை முழுமையாக கடந்து செல்லாமல், குறுக்கு வழியில் விரைவாக சென்று நிலவை 10 நாளில் நெருங்கியது.
லூனா விண்கலத்தை, நிலவின் தென்துருவ பகுதியில் இன்று தரையிறக்க ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ‘ராஸ்காஸ்மாஸ்’ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக லூனா-25 விண்கலத்தை, தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழைக்கும் முயற்சியில் விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக, லூனா-25 விண்கலத்தின் தகவல் தொடர்பு துண்டானது. விண்கலத்தை கண்டுபிடிக்கவும், அதை மீண்டும் தொடர்பு கொள்ளவும் கடந்த 2 நாட்களாக மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில், லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, நிலவின் இறுதிகட்ட சுற்றுப் பாதையைவிட்டு விலகி கீழே விழுந்து நொறுங்கியதாக ராஸ்காஸ்மாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் விண்வெளி ஆய்வுப் பணியில் இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதற்கான காரணங்களை ஆராய சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT