Published : 20 Aug 2023 11:00 PM
Last Updated : 20 Aug 2023 11:00 PM

உக்ரைனுக்கு உதவிக்கரம்: F-16 போர் விமானங்களை வழங்க டென்மார்க், நெதர்லாந்து முடிவு

கோப்புப்படம்

கோபன்ஹேகன்: ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்யும் வகையில் எஃப்-16 போர் விமானங்களை வழங்க டென்மார்க் மற்றும் நெதர்லாந்து முடிவு செய்துள்ளது. இதனை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்கு 6 எஃப்-16 போர் விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மேலும் 8 போர் விமானங்கள் மற்றும் 2025-ல் 5 போர் விமானங்கள் என 19 எஃப்-16 போர் விமானங்களை வழங்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளனர். “சுதந்திரத்துக்காக போராடும் உக்ரைனுக்கு எங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக இதை வழங்குகிறோம். உக்ரைனுக்கு தேவை உள்ள வரை இந்த ஆதரவு தொடரும்” என மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை அன்று நெதர்லாந்து மற்றும் டென்மார்க் பிரதமர்களை சந்தித்து பேசி இருந்தார். வான்வழி தாக்குதலை தடுக்க இந்த எஃப்-16 ரக போர் விமானங்கள் தங்களுக்கு பெரிதும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவை அவர் வரவேற்றுள்ளார்.

அமெரிக்க நாட்டின் ஜெனரல் டைனமிக்ஸ் எனும் நிறுவனம் தான் எஃப்-16 போர் விமானங்களை முதன்முதலில் வடிவமைத்தது. கடந்த 1978 முதல் இந்த போர் விமானத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. தரை மற்றும் வானில் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. கடந்த 2010-ம் ஆண்டு வரை சுமார் 4,5000 எஃப்-16 போர் விமானங்களை உலக நாடுகளுக்கு டெலிவரி செய்துள்ளது அமெரிக்கா. அதில் டென்மார்க் மற்றும் நெதர்லாந்தும் அடங்கும். இதற்கான ஒப்புதலை அமெரிக்கா அண்மையில் வழங்கி இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x