Published : 16 Aug 2023 08:35 PM
Last Updated : 16 Aug 2023 08:35 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் 5 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை அவமதிக்கும் வகையில் அவதூறு பேசியதாகத் தெரிகிறது. இதனையடுத்து துப்புரவுத் தொழிலாளியான அவரது வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உள்ளூர்வாசிகள் அப்பகுதியில் உள்ள தேவாலயங்களை சேதப்படுத்தினர். மேலும் கிறிஸ்துவர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்தும் தாக்குதல் நடத்தினர். வன்முறைக் கும்பல் தேவாலயத்தின் மீது புனித சிலுவையை சாய்க்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாகின. சில வீடியோக்களில் முஸ்லிம் மதகுருக்கள், பாகிஸ்தானில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால் மக்களே எடுக்க வேண்டும் எனத் தூண்டிவிடும் காட்சிகளும் இருந்தன.
அக்மல் பாட்டி என்ற கிறிஸ்துவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ”5 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்துவர்கள் வீடுகள் சூறையாடப்பட்டதோடு விலைமதிப்புள்ள பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன” என்றார்.
இதற்கிடையில் குரானை அவதூறு பேசிய குற்றச்சடடின் பேரில் கிறிஸ்துவர் ஒருவர் மீது பாகிஸ்தான் போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.
பாகிஸ்தான் தேவாலயங்களின் பேராயர் ஆசாத் மார்ஷல் தனது சமூக வலைதளப் பதிவில், "போலியான தகவலின் அடிப்படையில் தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளன. பைபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நடக்கும் சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT