Published : 16 Aug 2023 06:03 PM
Last Updated : 16 Aug 2023 06:03 PM
லண்டன்: புகழ்பெற்ற ராமர் கதை சொற்பொழிவாளரான முராரி பாபுவின் சொற்பொழிவில் பங்கேற்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தனது மத நம்பிக்கை தனது நாட்டுக்காக சிறப்பாக பாடுபடத் தேவையான வலிமையை தனக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளரும், வட இந்தியாவில் செல்வாக்கு மிக்க ஆன்மிக தலைவராகவும் உள்ள முராரி பாபுவின் ஆன்மிக சொற்பொழிவு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜீசஸ் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. பகவான் ராமரின் கதையை முராரி பாபு சொற்பொழிவாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "நான் பிரதமராக இங்கு வரவில்லை. இந்துவாக இங்கு வந்துள்ளேன். முராரி பாபுவின் ராமர் கதை சொற்பொழிவைக் கேட்க நான் இங்கு இருப்பதற்காக பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். இது எனக்குக் கிடைத்த உண்மையான கவுரவம்.
என்னைப் பொறுத்தவரை மத நம்பிக்கை என்பது மிகவும் தனிப்பட்டது. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அது எனக்கு வழிகாட்டுகிறது. பிரதமராக இருப்பது மிகப் பெரிய கவுரவம். ஆனால், அது எளிதான பணி அல்ல. கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்; கடினமான தருணங்களை எதிர்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான துணிச்சலையும், வலிமையையும், உறுதியையும் எனது நம்பிக்கை எனக்கு அளிக்கிறது. முராரி பாபுவின் பின்னால் தங்கத்தால் ஆன அனுமன் இருக்கிறார். இதேபோல், எனது மேஜையில் தங்க விநாயகர் சிலை இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
பிரட்டன் குடிமகனாக இருப்பதற்காகவும், இந்துவாக இருப்பதற்காகவும் பெருமை கொள்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது தெற்கு ஹாம்ப்டனில் உள்ள கோயில்களுக்கு எனது சகோதரர்களோடு சென்றிருக்கிறேன். பகவான் ராமர் எனக்கு எப்போதுமே வழிகாட்டியாக திகழ்கிறார். சவால்களை துணிவுடன் எதிர்கொள்ளவும், மனிதாபிமானத்தோடு அரசை நடத்தவும், சுயநலமின்றி பணியாற்றவும் அவர் எனக்கு வழிகாட்டுகிறார். நான் இங்கிருந்து செல்லும்போது, முராரி பாபுவின் ராம கதைகள் குறித்த நினைவுகளுடனும், பகவத் கீதா மற்றும் அனுமன் சாலிசாவின் நினைவுகளுடனும் செல்வேன்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT