Published : 14 Aug 2023 07:01 AM
Last Updated : 14 Aug 2023 07:01 AM
புதுடெல்லி: கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் 2016-ம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அதேபோல், வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் 2018-ம் ஆண்டு பிரிட்டன் தப்பிச் சென்றார்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், “தண்டனையிலி ருந்து தப்பிப்பதற்காக தஞ்சமடையும் நாடாக பிரிட்டன் இருக்காது” என்று பிரிட்டன் அமைச்சர் டாம் துகென்தாட் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கொல்கத்தாவில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஜி20 அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. ஊழலை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.இந்தக் கூட்டத்தில் பிரிட்டன் அமைச்சர் டாம் துகென்தாட்டும் கலந்துகொண்டார்.
விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி போன்ற பொருளாதார குற்றவாளிகள் பிரிட்டனில் தஞ்சமடைந்தது குறித்தும், அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்தும், செய்தியாளர்கள் சந்திப்பின்போது டாம் துகென்தாட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “பொருளாதார குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக பிரிட்டனும் இந்தியாவும் சில சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தஞ்சமடைவதற்கான நாடாக பிரிட்டன் உருவாகாது” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT