Published : 03 Nov 2017 03:25 PM
Last Updated : 03 Nov 2017 03:25 PM
ஆப்பிரிக்காவில் இயற்கை எரிபொருள் பயன்பாடு விரிவுபடுத்தப்பட்டால், பாலியல் பலாத்கார வன்முறைகளிலிருந்து மக்களைக் காக்க முடியும் என்று அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் ரிக் பெரி கூறியதையடுத்து சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களிடம் வசமாகச் சிக்கினார்.
முன்னாள் டெக்ஸாஸ் கவர்னரான ரிக் பெரி, அமெரிக்க எரிவாயு, எண்ணெய், நிலக்கரி ஏற்றுமதியை விரிவாக்குவதற்காக கடந்த வாரம் தென் ஆப்பிரிக்கா சென்றிருந்த போது இந்தக் ‘அரிய’ கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் தென் ஆப்பிரிக்கா சென்றிருந்த போது கிராமப் பெண் ஒருவர் தன்னிடம், மின்சாரம் இருந்தால் அந்த வெளிச்சத்தில் படிப்பது காரியங்கள் செய்வது சுலபமாக இருக்கும் என்றும், பாலியல் தாக்குதல்களிலிருந்தும் காத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்ததாக ரிக் பெரி கூறியுள்ளார்.
“மின்விளக்குகள் எரியும் போது அது நற்குணத்தின் மீது பளிச்சிடுகிறது. அதாவது நீங்கள் விருப்புறுதி கொண்டால், அம்மாதிரியான நடவடிக்கைகளில் விருப்புறுதி கொண்டால் நற்குணம் வெளிப்படும், இதில் இயற்கை எரிபொருள் தன் பங்கை ஆற்றும்” என்றார்.
இவரது இந்தக் கருத்தையடுத்து காற்றாலை, சூரியஒளி சக்தியை அதிகம் பயன்படுத்துமாறு வலியுறுத்தும் சியாரா கிளப் சுற்றுச்சூழல் அமைப்பு ரிக் பெரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று சாடியுள்ளது.
“இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தினால் பாலியல் பலாத்கார வன்முறைகள் குறையும் என்பது மிகப்பெரிய பொய், என்பதோடு, இன்றைய உலகில் உயிர் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிகவும் ஆழமான பிரச்சினையை சிறுமைப்படுத்துவதாகும்” என்று அந்த அமைப்பின் இயக்குநர் மைக்கேல் புரூனே தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவின் எரிசக்தி தேவையை 70% நிலக்கரியே பூர்த்தி செய்து வருகிறது, 22% எண்ணெயும், 4% இயற்கை எரிவாயும் பூர்த்தி செய்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT