Published : 12 Aug 2023 06:54 AM
Last Updated : 12 Aug 2023 06:54 AM

47 ஆண்டுக்கு பிறகு நிலவுக்கு லூனா-25 விண்கலத்தை அனுப்பிய ரஷ்யா - சந்திரயானுக்கு முன்னதாக தரையிறங்கும் என தகவல்

மாஸ்கோ: ரஷ்யாவின் விண்வெளி முகமை, லூனா-25 என்ற விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. இது இந்தியாவின் சந்திரயானுக்கு முன்னதாக தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இது வரும் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் விண்வெளி முகமையான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. கடந்த 1976-ம் ஆண்டு ரஷ்யாவை உள்ளடக்கிய சோவியத் யூனியன் சார்பில் நிலவுக்கு விண்கலம் அனுப்பப்பட்டது. அதன் பிறகு 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.

லூனா-25 விண்கலம் வரும் 16-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு நிலவின் சுற்று வட்டப்பாதையை சுற்றி வரும் லூனா-25, வரும் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் சந்திரயான் விண்கலத்துக்கு முன்னதாகவே தரையிறங்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஸ்காஸ்மோஸ் வெளியிட்ட அறிக்கையில், “நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் திறன் ரஷ்யாவுக்கு உள்ளது என்பதை பறைசாற்றவும் நிலவின் தரைப்பரப்பில் ரஷ்யாவாலும் கால்பதிக்க முடியும் என்பதை உறுதி செய்யவுமே லூனா-25 அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் விண்வெளி விஞ்ஞானி விட்டலி இகோரோவ் கூறும்போது, “நிலவில் தண்ணீர் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் அதிபர் புதினைப் பொருத்தவரை நிலவை ஆய்வு செய்ய வேண்டும் என்பது இலக்கு அல்ல. விண்வெளி ஆய்வில் சிறந்து விளங்குவதாக சீனாவும் அமெரிக்காவும் கூறிக்கொள்கின்றன. வேறு சில நாடுகளும் இந்த சாதனையை எட்ட முயற்சிக்கின்றன. எனவேதான் ரஷ்யா இந்த விண்கலத்தை அனுப்பி உள்ளது. இதன்மூலம் சோவியத் யூனியனின் நிபுணத்துவத்தை மீட்க வேண்டும் என்பதுதான் நோக்கம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x