Published : 25 Nov 2017 07:01 PM
Last Updated : 25 Nov 2017 07:01 PM
எகிப்தின் சினாய் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 குழந்தைகள் உட்பட 305 ஆக அதிகரித்துள்ளது.
எகிப்தின் சினாய் பகுதியில் கடந்த 2013 முதல் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு பாதுகாப்பு படையினருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக உள்ள பொது மக்கள் மீதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சினாய் பகுதியின் பிர் அல்-அபெத் நகரில் உள்ள மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். லேசான காயமடைந்து வெளியே ஓடி வந்தவர்களை மசூதியை சூழ்ந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதல்களில் படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பவ பகுதியில் அவசர நிலை அமல் செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று எகிப்து அரசு அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சமாதி எழுப்பப்படும் என்று எகிப்து அதிபர் அப்துல் பதா அல்-சிசி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT