Published : 02 Aug 2023 04:02 PM
Last Updated : 02 Aug 2023 04:02 PM
பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்ததை அடுத்து, 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீன தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பதிவாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜூலை 29) முதல் புதன்கிழமை காலை (ஆகஸ்ட் 2) வரை பெய்ஜிங் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 744.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பெய்ஜிங் வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
தென் சீன மாகாணங்களை தாக்கிய டோக்சுரி சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்ததால், வட சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹெபெய் மாகாணம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், மின்சாரம் மற்றும் குடிநீர் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பெய்ஜிங்கின் தென்மேற்கில் உள்ள ஹெபெய் மாகாணத்தில்ன் சிறிய நகரான ஜுவோஜோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு ஏராளமான மக்கள் சிக்கிக் கொண்டுள்ள நிலையில், அவர்கள் எத்தனை பேர் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கனமழையால், பெய்ஜிங் மற்றம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் வானிலை குறித்த தரவுகள் 1883-ம் ஆண்டு முதல் உள்ளன. அதன்படி, சீனாவில் கடந்த 1891-ஆம் ஆண்டு வெய்போ நகரில் 609 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதன் பிறகு, கடந்த சில நாட்களாக தொடர்ந்து 744.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்தவகையில், இது கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத மழைப் பொழிவாகும்.
கனமழையை அடுத்து பெய்ஜிங்கின் புறநகர் பகுதிகளிலும், அருகிலுள்ள நகரங்களிலும் உள்ள பள்ளிகள் மற்றும் பிற பொது கட்டிடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய தற்காலிக முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக பெய்ஜிங்கில் தற்போது கோடைக்காலமாக இருக்கும் என்றும், வறண்ட வானிலையும் அதிகபட்ச வெப்பமும் நிலவும் என்றும், ஆனால், இந்த திடீர் கனமழை காரணமாக பெய்ஜிங் மக்கள் ஆச்சரியமும் அவதியும் அடைந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT