Published : 01 Nov 2017 11:50 AM
Last Updated : 01 Nov 2017 11:50 AM
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாதசாரிகள் செல்லும் பாதையில் தீவிரவாதி ஒருவர் லாரி ஓட்டி வந்து பாதையில் சென்றவர்கள் மீது மோதி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "நியூயார்க்கிலுள்ள உலக வர்த்தக மையம் நினைவுச் சின்னம் அருகே, செவ்வாய்க்கிழமை தீவிரவாதி ஒருவர் லாரியை ஓட்டி வந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியு நபர் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சைபுல்லா சைபொவ் (29) என்றும், அவரிடமிருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய நபர் லாரியிலிருந்து இறங்கியதும் போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலை ’கோழைத்தனமான தீவிரவாத தாக்குதல்’ என்று கூறியுள்ள அமெரிக்க போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலில் பலியானவர்கள் 5 பேர் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக ஐஎஸ் இயக்கம் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வாகனங்களைக் கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் கண்டனம்
நியூயார்க் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நியூயார்க் தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது பிரார்த்தனைகள் உடனிருக்கும். நியூயார்க் நகர போலீஸாருக்கு எனது நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி கண்டனம்:
நியூயார்க் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கண்டம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "நியூயார்க் தாக்குதலுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய பிரார்த்தனைகள் உடனிருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT