Published : 31 Jul 2023 08:47 AM
Last Updated : 31 Jul 2023 08:47 AM

செர்பியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பத்மா ராஜன் மறைவு

பத்மா ராஜன் | குடும்பத்தினருடன் பத்மா ராஜன் (வலமிருந்து 2-வது)

செர்பியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பாடுபட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்மா ராஜனின் (61) திடீர் மறைவால் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் மனைவி உட்பட பலர், பத்மா ராஜனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 25-ம் தேதி திடீரென அவர் காலமானது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செர்பியா நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளின் மேம்பாட்டிலும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு சேவைகளைச் செய்து வந்த பத்மா ராஜன் சென்னையில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர். அதன் பிறகு செர்பியாவுக்கு வந்து குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தார்.

இந்நிலையில், செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தனது பெயரிலேயே `தி நோவக் ஜோகோவிச் அறக்கட்டளை`யை (என்டிஎஃப்) தொடங்கினார். இந்த அறக்கட்டளையானது, செர்பியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பின்தங்கிய குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் வளர்ப்பு சூழலை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.

2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையில் இணைந்து செயல்பட்டவர் பத்மாராஜன். அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினராகவும், பங்களிப்பாளராகவும் அவர் செயல்பட்டு வந்தார். அறக்கட்டளையில் இணைவதற்கு முன்னர், ஜோகோவிச்சின் தீவிர ரசிகையாக அவர் இருந்தார். அவர் விளையாடும் போட்டிகளை தவறாமல் பார்ப்பார் பத்மா ராஜன். அதன் பின்னர்தான் ஜோகோவிச்சின் அறக்கட்டளையில் இணைந்தார்.

இந்த அறக்கட்டளையின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த பத்மா ராஜன், தொழிலதிபராகவும், கொடையாளராகவும் செர்பியாவில் அறியப்பட்டவர். பல்வேறு தொண்டு நிறுவனங்களில், குறிப்பாக செர்பியா நாட்டின் கல்வித் துறையில் தீவிர செயல்பட்டாளராக இருந்து வந்துள்ளார்.

நோவக் ஜோகோவிச்சின் மனைவி ஜெலினா ஜோகோவிச்சுக்கு மிகவும் நெருக்கமான தோழியாகவும், என்டிஎஃப் அறக்கட்டளையின் முக்கிய தூணாகவும் இருந்தார்.

தனது 61-வது வயதில் அவர் மறைந்தது, அங்குள்ள கல்வி ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பத்மா ராஜனின் மறைவுச் செய்தி ஜோகோவிச்சின் மனைவி ஜெலினாவை பெரிதும் பாதித்துள்ளது. பத்மா ராஜனின் மறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெலினா இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

குழந்தைகளின் ஆரம்பக் கல்வி மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவுவதை தனது வாழ்க்கையின் ஓர் அங்கமாக வைத்திருந்தார் பத்மா ராஜன். இதுவே அவர் நோவக் ஜோகோவிச்சின் அறக்கட்டளையில் முழுமையாக இணைவதற்கு தூண்டுகோலாக அமைந்தது.

செர்பியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு பணிகளைச் செய்து வந்தார். குறிப்பாக அமெரிக்காவில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சித் திட்டங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மேலும் அந்தத் திட்டங்களுக்குத் தேவையான நிதியுதவியையும் அவர் வழங்கினார். என்டிஎஃப் அறக்கட்டளையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

அவரது மறைவுச் செய்தி என்டிஎஃப் அறக்கட்டளையில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

ஜெலினா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “பத்மாவின் மறைவுச் செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். எனது இதயம் உடைந்துவிட்டது. பத்மா ராஜனை எனக்கு நன்றாகத் தெரியும். என்டிஎஃப் அறக்கட்டளையில் அவரது செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன். அவருக்கு அழகான உள்ளம். எங்கள் சில சந்திப்புகளில் நாங்கள் எவ்வளவு அன்பையும் இரக்கத்தையும் பெற்றிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்.

அவர் மிகவும் நேசித்த மற்றும் கவனித்துக் கொண்ட அவரது 2 குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்டிஎஃப் அறக்கட்டளை மீதான அவரது ஆர்வத்தையும் நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். அறக்கட்டளை மீதான அவரது ஈடுபாட்டை நாங்கள் பல ஆண்டுகளாக பார்த்து வந்துள்ளோம். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் ஜெலினாவின் இரங்கல் செய்தியைப் பார்த்த ஏராளமானோர், பத்மா ராஜனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், குழந்தைப் பருவ வளர்ச்சி, மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தருவது குறித்து பத்மா ராஜன் ஏற்கெனவே ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

உலகிலேயே குழந்தைகள்தான் மிகவும் சிறந்தவர்கள். குழந்தைகளின் ஆரம்பக் கல்வியும், அவர்களின் குழந்தைக் காலமும் சிறப்பாக அமைந்துவிட்டால் அவர்கள் நல்ல நிலையை அடைவார்கள் என்பது எனது கருத்து. அதற்காகத்தான் குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கு நான் பாடுபட்டு வருகிறேன். ஆதரவற்று விடப்படும் குழந்தைகளுக்காகவும் போராடி வருகிறேன். குழந்தைகளின் ஆரம்பக் கல்வி குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறேன். அதில் கிடைத்த முடிவுகளை அமல்படுத்தியும், திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியும் வருகிறேன். எனக்கும் வளர்ந்த 2 குழந்தைகள் உண்டு. எனது மகன் ஒரு வழக்கறிஞர், எனது மகள் ஒரு குழந்தைகள் நல மருத்துவர்.

குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தருவதற்காகவே கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் நோவக் ஜோகோவிச் நடத்தும் என்டிஎஃப் அறக்கட்டளையில் என்னை இணைத்துக் கொண்டேன். ஜோகோவிச்சும், அவரது மனைவி ஜெலினாவும் எனது செயல்பாடுகளைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டனர். எனது திட்டங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்தனர்.

ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள துவால்கவுன்டி பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளேன். அமெரிக்காவின் வேறு சில பகுதிகளுக்கும் சென்று ஆய்வுகளை நடத்தியுள்ளேன்.

குழந்தைகளுக்கு சிறந்த அடித்தளத்தை வழங்குவது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். குழந்தைகளுக்குச் செய்யும் முதலீடானது, எதிர்காலத்துக்கு செய்யும் முதலீடாக இருக்கும்.

இந்தியாவின் தென் பகுதியில் உள்ள சென்னையில் பிறந்து அமெரிக்காவுக்கு வந்தவள் நான். கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டின் மதிப்பை என் பெற்றோர் எனக்குக் கற்றுத் தந்துள்ளனர். பென்சில்வேனியாவுக்கு வந்த போது,குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவதை நான் மிகவும் விரும்பினேன். அப்படித்தான் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி மீது ஈடுபாடு வந்தது.

பின்னர் நோவக் ஜோகோவிச்சின் அறக்கட்டளையில் இணைந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினோம். செர்பியாவில் உள்ள குடும்பங்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவுவது மகிழ்ச்சியான விஷயம்.

செர்பியாவில் உள்ள குழந்தைகள், உலகத்தின் குடிமக்களும் ஆவர். அவர்களுக்கும் நல்ல, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று தான் போராடுகிறேன். இறுதி மூச்சு வரை அதை செய்வேன். இவ்வாறு அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அவரளித்த பேட்டியில் கூறியிருந்தபடியே தனது இறுதி மூச்சு வரை குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க போராடினார். இதற்கு செர்பியாவைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அவருக்கு தெரிவித்த இரங்கலே சாட்சி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x