Published : 04 Nov 2017 12:14 PM
Last Updated : 04 Nov 2017 12:14 PM
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹேட்டன் பகுதியிலுள்ள ஹுஸ்டன் சாலையில் கடந்த புதன்கிழமையன்று வெள்ளை நிற சரக்கு லாரி ஒன்று அங்கிருந்த பாதசாரிகள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் 8 பேர் பலியாகினர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக சைபுல்லா சாய்போவ் (29) என்பவரை அமெரிக்க போலீஸார் கைது செய்தனர்.
சாய்போவ் மீது தீவிரவாத குழுவுக்கு ஆதரவு அளித்தவர், வாகனங்களை சேதப்படுத்தியவர் என்ற வழக்குகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க போலீஸார் தொடர்ந்து சாய்போவ்விடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் குறித்து ஐஎஸ் தங்களுடைய அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், ''ஐஎஸ் இயக்கத்தின் போர் வீரர்களில் ஒருவர்தான் நியூயார்க் நகரத் தெருவில் தாக்குதல் நடத்தினார்” என்று குறிப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்காவில் ஐஎஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
கடந்த இரு தினங்களாக அமெரிக்க ராணுவத்தினர் ஐஎஸ் அமைப்பின் மீது பெரும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT