Published : 09 Nov 2017 09:56 AM
Last Updated : 09 Nov 2017 09:56 AM
இதே தினம் - நவம்பர் 9. ஆண்டு 1989. பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த, 160 கிலோ மீட்டர் தூரத்துக்கு எழுப்பப்பட்டிருந்த, அந்தச் சுவர் இடிக்கப்பட்டது. அரசியலை மீறிச் செயல்பட்டது மக்கள் சக்தி.
அந்தச் சுவர் எழுப்பப்பட்டதும் சரித்திரத்தில் ஒரு முக்கிய மைல் கல். இடிக்கப்பட்டதும்தான்.
இரண்டாம் உலகப் போரிலும் ஹிட்லர் தரப்பு கடும் தோல்வியைச் சந்தித்தது. போரில் வென்ற நாடுகள் ஜெர்மனியை இரண்டாகப் பிரித்துக் கொண்டன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்றும் ஜெர்மனியின் ஒரு பகுதியை தங்கள் வசமாக்கிக் கொண்டன. அதற்கு ‘ஃபெடரல் ரிபப்ளிக் ஆஃப் ஜெர்மனி’ என்று பெயரிட்டன. ஜெர்மனியின் மறுபகுதியை தங்கள் வசம் வைத்திருந்த சோவியத் யூனியன் அந்தப் பகுதிக்கு ‘ஜெர்மன் டெமாக்ரடிக் ரிபப்ளிக்’ என்று பெயரிட்டது. என்றாலும் மக்கள் அவற்றை முறையே மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என்றுதான் அழைத்தார்கள்.
ஆனால் பெர்லின் நகரை யார் எடுத்துக் கொள்வது என்பதில்தான் இடியாப்பச் சிக்கல். இறுதியில் பெர்லினை இரண்டாகப் பிரிப்பது என்று முடிவானது. எனினும் சோவியத் யூனியனைப் பொறுத்தவரை பிரச்சினை தொடர்ந்தது. மேற்கு ஜெர்மனியில் வளம் அதிகமாகவும் கட்டுப்பாடுகள் குறைவானதாகவும் இருந்ததால் கிழக்கு ஜெர்மனியிலிருந்து பலரும் மேற்கு ஜெர்மனிக்கு கொத்துக் கொத்தாகக் குடியேறினார்கள்.
பெர்லினின் இரு பகுதிகள் முள்வேலியால் பிரிக்கப்பட்டது. பலனில்லை. சுமார் 35 லட்சம் கிழக்கு ஜெர்மனி மக்கள் பலவித சாகசங்களைச் செய்து மேற்கு ஜெர்மனிக்கு சென்று விட்டார்கள். மேற்கு பெர்லின் செல்வது சுலபமாக இருந்தது. அங்கிருந்து மேற்கு ஜெர்மனிக்குச் செல்வதும் சுலபம். அதன் பிறகு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல முடியும்.
இதைத் தடுக்க கான்க்ரீட் சுவர் ஒன்றை எழுப்புவதுதான் ஒரே வழி என்று தீர்மானிக்கப்பட்டது. 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி பெர்லின் சுவரை எழுப்பினார்கள் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள். இதன் காரணமாக பல குடும்பங்கள் பிளவுபட்டன.
அடுத்த நாற்பது ஆண்டுகளில் சுவரை உடைக்கவும், சுவருக்குக் கீழ் சுரங்கம் தோண்டவும், சுவரின் மீது ஏறவும் முயற்சி செய்தவர்கள் இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளப்பட்டனர். இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்ட சுமார் 5,000 பேரில் 200 பேர் குண்டுகளுக்குப் பலியானார்கள்.
அதுவும் 18 வயது நிரம்பிய பீட்டர் ஃபெச்சர் என்ற இளைஞனின் பரிதாப முடிவு பரவலாகப் பேசப்பட்டது. அவனும் அவனது நண்பனும் தப்பிச் செல்வதற்காக பெர்லின் சுவரின் அருகிலிருந்து ஓர் உயர்ந்த கட்டிடத்தின் மேற்பகுதியை அடைந்தனர். அங்கிருந்து சுவரின் மீது ஏறத் தொடங்கினர். பீட்டரின் நண்பன் மறுபகுதியை அடைந்து விட்டான். ஆனால் சுவர் ஏறும் முயற்சியின்போது பீட்டர் சுடப்பட்டான். கிழக்குப் பகுதியிலேயே விழுந்தான். ஒரு மணி நேரம் ரத்த வெள்ளத்தில் துடித்தான். அதற்குப் பிறகே அதிகாரிகள் அவனை எடுத்துச் சென்றார்கள்.
போகப் போக காலம் கனிந்தது. அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் உள்ள கடும் பகை கொஞ்சம் சமனப்பட்டது. கோர்பசேவ் போன்ற இளம் தலைவர்கள் சோவியத் யூனியனில் தலையெடுத்தார்கள். அவர்கள் மாற்றங்களுக்குத் தயாராகவே இருந்தனர். எனவே சுவரைத் தாண்டுபவர்களை கொல்லும் போக்கு குறைந்தது. என்றாலும் அதிகாரபூர்வமாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்ல முடியவில்லை. 1989-ல் அருகிலிருந்த போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளில் பல புரட்சிகள் நடந்தன. அவை கிழக்கு ஜெர்மனியிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. உள்ளூர் போராட்டம் அதிக மானது.
1980-களின்போது தங்கள் பக்கமிருந்த சுவரில் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பல ஓவியர்கள் வரையத் தொடங்கினர். இதற்கு நேர் மாறாக கிழக்குப் பகுதி சுவர் எதுவும் வரையப்படாமல் வெற்றிடமாகவே இருந்தது. ஏனென்றால் அந்தப் பகுதியை அடையும் ஓவியர்களுக்கு துப்பாக்கிக் குண்டுகள் காத்திருந்தன. 1989-ல் பெர்லின் சுவர் இடிந்த பிறகு மீதமிருந்த அந்தச் சுவரின் பகுதிகளின் கிழக்குப் பகுதியிலும் ஓவியங்கள் வரையப்பட்டன.
ஒரு கட்டத்தில் ‘இனி பொறுப்பதில்லை தம்பி. கடப்பாரையைக் கொண்டு வா’ என்று தீர்மானித்தனர் கிழக்கு ஜெர்மனி மக்கள். எதிர்பாராதது நடந்தது. தொடக்கத்தில் பெர்லின் சுவரின் கற்கள்தான் இடிக்கப்பட்டன. அடுத்த சில நாட்களில் பாளம் பாளமாகப் பெயர்க்கப்பட்டன. அதன் பின்னர் இரு அரசுகளும் மீதமிருந்த சுவரையும் நீக்கின.
(கட்டுரையாசிரியர் உலக நாடுகள் குறித்து பல கட்டுரைகள் எழுதியவர். ‘தி இந்து’ வெளியீடான ‘நாடுகளின் வரலாறு’ நூலாசிரியர்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT