Published : 27 Jul 2023 01:34 PM
Last Updated : 27 Jul 2023 01:34 PM

நைஜர் நாட்டில் பதற்றம்: அதிபரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

தொலைகாட்சியில் பேசும் நைஜர் ராணுவ தளபதி  அமடோ அப்த்ரமேனே

நியாமே: ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும்மை அதிகாரத்திலிருந்து அகற்றி, ஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது.

ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் அதிபர் முகமது பாசும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்படுவதாக ராணுவத்தினர் புதன்கிழமை இரவு அறிவித்தனர். ஆனால், தற்போது அதிபர் முகமது பாசும் எங்குகிறார் என்ற தகவலை ராணுவம் வெளியிடவில்லை. எனினும், அதிபர் பாசும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ராணுவத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய நைஜர் ராணுவ தளபதி அமடோ அப்த்ரமேனே பேசும்போது , “ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள், ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளன. நாட்டின் பாதுகாப்பின்மை, பொருளாதார சரிவு ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைகள் மூடப்படுகின்றன. அனைத்து நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்படுகின்றன. சில பகுதிகளில் பதற்றத்தை தவிர்க்க ஊரடங்கு விதிக்கப்படுகிறது" என்று கூறினார்.

இந்த நிலையில், ராணுவத்தினரின் முடிவை எதிர்த்து நாட்டில் பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நைஜர் ராணுவத்தின் செயலை அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவை கண்டித்துள்ளன.

நைஜர் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நைஜிரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் நைஜரிலும் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு, அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது.

போகோ ஹராம்: 2002-ல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாக தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தொடங்கியது. போகோ ஹராம் தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கான பேரைக் கொன்றுள்ளனர். இதனால், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x