Published : 07 Nov 2017 04:22 PM
Last Updated : 07 Nov 2017 04:22 PM
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளால் தொலைக்காட்சி நிலையம் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஏஏஃப்பி செய்தி நிறுவனம், ''ஆப்கானிஸ்தானில் தேசிய அளவில் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனம் ஷம்ஷட். இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த தொலைக்காட்சி நிலையத்துக்குள் துப்பாக்கி ஏந்திய மூன்று தீவிரவாதிகள் நுழைந்து, அங்குள்ள பணியாளர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அவர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தாலிபன் தீவிரவாதிகளின் செய்தித் தொடர்பாளர் சைபுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தாலிபன்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியதை அடுத்து காபூல் தொடர்ந்து தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
கடந்த வாரம் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தற்கொலைப்படை தீவிரவாதியாக மாறி தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியாகினர்.
காபூலில் தொடர்ந்து தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT