Published : 23 Jul 2023 04:21 AM
Last Updated : 23 Jul 2023 04:21 AM

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் நெருக்கடிக்கு உள்ளானது அமெரிக்கா - அரிசி வாங்க கடைகளில் குவியும் மக்கள்

கலிபோர்னியா: கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தச்
சூழலில் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை அறிவிப்பு வெளியானதையடுத்து, அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்களிடம் அச்சம் பரவியது. இதையடுத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள இந்திய கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அரசி வாங்க வந்தபடி உள்ளனர். இதனால், அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன. ஒரு நபருக்கு ஒரு அரிசி பை என்ற வரம்பில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

அரிசிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவில் பல கடைகள் அரிசி விலையை உயர்த்தி வருகின்றன. முன்பு 22 டாலராக இருந்த அரிசிப் பையின் விலை தற்போது 47 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் துருக்கி, சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீவிரமாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நாடுகளில் ஏற்கெனவே
உணவுப் பணவீக்கம் அதிகமாக இருக்கும் சூழலில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை உத்தரவு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கோதுமை விலை அதிகரித்துள்ளது. தற்போது, இந்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்திருக்கும் நிலையில், உலகளவில் உணவு பாதுகாப்பின்மை தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x