Published : 21 Jul 2023 01:57 PM
Last Updated : 21 Jul 2023 01:57 PM

புலம்பெயர்ந்து வருவோருக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை: மேயர் திட்டவட்டம்

நியூயார்க்: புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனியும் நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்க மாகாண அரசுகளிடம் கருத்து வேறுபாடு நிகழ்கிறது. நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “நியூயார்க் நகரம் நிரம்பிவிட்டது. எங்கள் கோப்பை நிரப்பப்பட்டுவிட்டது. புலம்பெயர்ந்த மக்களுக்கு இனி இங்கு இடமில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமார் 90,000 பேர் நியூயார்க்குக்கு வந்துள்ளனர். இனியும் வந்தால் அவர்கள் தங்குவதற்கு இடமில்லை. இதனை நான் முன்னரே பதிவு செய்திருந்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நேரடி சாட்சியாக பார்க்கிறோம்.

நியூயார்க்கில் வீடுகளின் விலை உயர்ந்துவிட்டது. இங்கு உணவு, போக்குவரத்து மற்றும் பிற தேவைகளின் விலையானது அமெரிக்காவில் பிற மாகாணங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இது இனியும் தொடர முடியாது, தேசியப் பிரச்சினையின் மொத்த எடையை நியூயார்க் நகரம் மட்டும் சுமக்கிறது என்பது தவறு" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு தொடக்கத்திலே, நியூயார்க் நகரில் புலம்பெயர்பவர்களால் உண்டாகும் நெருக்கடிகளை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், நியூயார்க் நகர மேயருமான எரிக் ஆடம்ஸ் விமர்சித்திருக்கிறார். இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நியூயார்க் மேயர் மட்டுமல்ல, அமெரிக்காவின் சிகாகோ, வாஷிங்டன் டிசி போன்ற நகர மேயர்களும் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x