Published : 19 Jul 2023 02:13 PM
Last Updated : 19 Jul 2023 02:13 PM

‘பெலாரஸில் வாக்னர் குழுவால் நேட்டோ படைகளுக்கு அச்சுறுத்தல்’ - ரஷ்ய ராணுவ முன்னாள் அதிகாரி பேட்டியால் சலசலப்பு

மாஸ்கோ: வாக்னர் குழுவினர் பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், உக்ரைன் நேட்டோ படைகளின் நெருக்கடியை சமாளிக்க ரஷ்யாவுக்கு புதிய உத்தி கிட்டியுள்ளதாக அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஆண்ட்ரே கர்டபோலோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி, உக்ரைன் போரை இன்னொரு கோணத்தில் எதிர்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் ஆயத்தமாகி வருகிறாரோ என்ற வினாக்களை எழுப்பியுள்ளது.

தொலைக்காட்சிப் பேட்டியில் பேசிய ஆண்ட்ரே, "நேட்டோ படைகள் போலந்து, லிதுவேனியா எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை உக்ரைனுக்கு ஆதரவாக அங்கிருந்து தாக்குதல் நடைபெற்றால் அதனை எதிர்கொள்ளும் வகையில்தான் வாக்னர் குழு பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய இடத்திலிருந்து நேட்டோ படைகளை எதிர்கொள்ள வாக்னர் குழுவுக்கு ஒருசில மணி நேரம் போதும்.

பெலாரஸ் நாடு ஐரோப்பாவின் போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் உக்ரைனுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. பெலாரஸ் ஒரு முக்கியமான மையமாக இருக்கிறது. எனவேதான் அங்கு வாக்னர் குழுவினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம், வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஸின் திடீரென ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். மாஸ்கோ நோக்கி அவரும் அந்தப் படையினரும் முன்னேற, புதின் க்ரெம்ளின் மாளிகையில் இருந்து அவசரமாக தனி விமானத்தில் சொந்த ஊருக்குப் புறப்பட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

அதன் பின்னர் வாக்னர் குழுவினருடம் ஒரு உடன்படிக்கை செய்யப்பட்டது என்றும், அதன்படி அவர்கள் பெலாரஸுக்கு அனுப்பப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பெலாரஸ் நாட்டு அதிபரே பிர்கோஸின் அங்கில்லை என்று கூறும் சூழலில், ரஷ்ய அரசியல்வாதி ஒருவர் வாக்னர் குழு பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து நேட்டோவை துவம்சம் செய்யும் என்றும் பேட்டியளித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய காலம் தொட்டு வாக்னர் குழு முக்கியப் பங்காற்றிய நிலையில் திடீரென அந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் போனதால் ரஷ்யாவின் பலம் குறைந்துவிட்டதாக எழும் விமர்சனங்களைத் தடுக்கவே இவ்வாறாக கட்டுக்கதைகளைப் பரப்புவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.

வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஸின் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஆண்ட்ரேவின் பேட்டி கவனம் பெறுகிறது.

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் தொடங்கி 500 நாட்களுக்கும் மேல் கடந்துவிட்ட நிலையில் போரின் அடுத்தக்கட்டம் பற்றி அந்நாட்டு மூத்த அரசியல்வாதி பேசியுள்ளது விவாதப் பொருளாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x