Published : 22 Nov 2017 03:01 PM
Last Updated : 22 Nov 2017 03:01 PM
பாகிஸ்தான் இஸ்லாமியப் பள்ளிகளில் நாளுக்குநாள் சிறுவர்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருகின்றன, ஆனால் சட்டமும், போலீஸும் இவர்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு, தீவிரவாதிகள், மதகுருமார்கள், அதிகார வர்க்க வலைப்பின்னல், வலதுசாரி இயக்கங்களின் துணையுடன் குற்றவாளிகளான மதகுருமார்கள் தப்பி வருவதாக அசோசியேட் பிரஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தனது 9 வயது மகனின் ரத்தம் தோய்ந்த கால்சட்டையை நினைத்துக் கொண்டு கண்ணீருடன் தாயார் கவுசர் பர்வீன் தன் மகன் பாலியல் தாக்குதலுக்கு ஆட்பட்டதை விவரிக்கிறார்.
கெரோர் பாக்கா என்ற ஊரில் உள்ள இஸ்லாமியப் பள்ளியில் இந்தச் சிறுவன் படித்து வந்தான். இந்நிலையில் ஒரு ஏப்ரல் மாத கடும் வெயிலில் இஸ்லாமிக் மத்ரசாவில் தன் அருகே மதகுருமார் படுத்திருப்பதைக் கண்டான் அந்தச் சிறுவன். அதன் பிறகு மூர்க்கமான பாலியல் பலாத்காரத்தில் அவர் ஈடுபட்டதாக தாயார் கூறுகிறார்.
அசோசியேட் பிரஸ் விசாரணையில் இது குறித்து தெரியவந்துள்ளது என்னவெனில் பாகிஸ்தான் மத்ரஸாக்களில் பாலியல் துஷ்பிரயோகம் என்பது மிகப் பரவலாக ஊடுருவிய ஒரு தீங்காகி விட்டது என்பதே. மதகுருமார்கள் அதிகாரம் செலுத்தும் ஒரு சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் என்பது பேசாப்பொருளாகியுள்ளது. இது பொதுவெளியிலும் எப்போதாவது விவாதிக்கப்பட்டு வருகிறது. எப்போதாவது இத்தகைய தீய செயல்கள் தண்டிக்கப்படுவதும் நடந்து வருகிறது.
இத்தகைய விவகாரங்களில் போலீஸாருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து நீதி நிலைநாட்டப்பட முடியாமல் மதகுருமார்களால் தடுக்கப்பட்டும் வருகிறது என்று பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
களிமண் வீடுகள் கொண்ட கிராமங்கள் முதல் நாகரீகம் அடைந்த நகரங்கள் வரை பாகிஸ்தானில் இஸ்லாமியப் பள்ளிகளில் பாலியல் வன்முறைகள் பரவலாகியுள்ளதாக அசோசியேட் பிரஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஏகப்பட்ட பாலியல் பலாத்கார புகார்கள் எழுந்துள்ளன, 20 லட்சம் குழந்தைகள் பாகிஸ்தான் இஸ்லாமியப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மதகுருமார்களின் பாலியல் வன்முறைகளுக்கு இவர்கள் ஆளாவது பற்றிய விசாரணை போலீஸ் ஆவணங்கள், பாதிக்கப்பட்டோரிடம் நேர்காணல்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், உதவிக்குழுக்கள் மற்றும் மத அதிகாரிகள் ஆகியோரிடம் நேரில் பேசியது என்று இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மதகுருமார்கள் மற்றும் இவர்களுக்கு ஆதரவளிக்கும் தீவிரவாத அமைப்புகள் மீது பயம் அதிகரித்துள்ளது. இந்த பாலியல் துஷ்பிரயோகங்களை பதிவு செய்யும் பணி அளிக்கப்பட்ட அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, 'மத்ரசாக்களில் பாலியல் வன்முறைகளால் தொற்று நோய் போல் நிரம்பியுள்ளது' என்றார். இவர் தன் பெயரைக் கூற விரும்பவில்லை, காரணம் இவர் மத்ரசா பாலியல் வன்முறைகளைப் புகாராக பதிவு செய்வதால் இவர் தற்கொலைத் தாக்குதல் இலக்காக்கப்பட்டுள்ளார்.
'மத்ரசாக்களில் ஆயிரக்கணக்கில் பாலியல் வன்முறைகள் நிகழ்கின்றன. இது மிகவும் சகஜமாகி விட்டது' என்றார் அச்சத்துடன் அந்த அதிகாரி.
இத்தகைய மதகுருமார்களை விமர்சித்தால் விமர்சகர்கள் மீது இவர்கள் பிரயோகிக்கும் ஆயுதம் மத நிந்தனை வழக்கு, மத நிந்தனைக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை.
'இதனால்தான் அவர்களை (மதகுருமார்கள்) நினைத்து நான் அஞ்சுகிறேன். அவர்களால் என்ன செய்ய முடியும், எந்த அளவுக்கு அவர்கள் போவார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன், இவர்களை அம்பலப்படுத்த என்ன தேவைப்படும் என்பது தெரியவில்லை. இவர்களை அம்பலப்படுத்த முயற்சி செய்வதே நம் உயிருக்கு ஆபத்தான காரியமாகும். இதைப்பற்றி பேசுவதே அபாயகரமானது' என்கிறார் அதே அச்சத்துடனேயே மற்றொரு அதிகாரி.
கடந்த 10 ஆண்டுகளில் இத்தனை மிரட்டல், அபாயங்களையும் மீறி 359 புகார்கள் பதிவாகியுள்ளன. இது பனிமலையின் ஒரு முகடு மட்டுமே என்கிறார் சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்யும் போக்குக்கு எதிரான சாஹில் என்ற அமைப்பை நடத்தி வரும் முனிஸா பானு.
2004-ம் ஆண்டில் மத்ரசாக்களில் இளம் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் தாக்குதல் புகார்கள் மட்டும் 500 என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் அம்பலப்படுத்தினார், ஆனால் அதன் பிறகு அவர் பேசவேயில்லை. இந்தப் புகார்கள் மீது கைதுகள் இல்லை, விசாரணைகளும் இல்லை.
பாகிஸ்தான் மத விவகார அமைச்சர் சர்தார் முகமது யூசப் இஸ்லாமியப் பள்ளிகளில் பாலியல் பலாத்கார புகார்களை மறுத்தார், இது மதகுருமார்களையும் மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் பரப்பப்படுகிறது என்று வழக்கம் போல் மறுத்துள்ளார். மேலும் செய்தித்தாள்களில் இது குறித்து வருவதும் தனக்குத் தெரியாது என்றார், எப்போதாவது நடக்கும். ஏனெனில் எல்லா இடங்களிலும் கிரிமினல்கள் உள்ளனர், மேலும் மதரசாக்களை சீர்த்திருத்தும் பணி உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு என்றார்.
உள்துறை அமைச்சகத்தை இது தொடர்பாக பேட்டி எடுக்கத் தொடர்பு கொண்ட போது, பல முறை எழுத்துப்பூர்வ கோரிக்கையும், தொலைபேசியில் கோரிக்கை வைத்தும் பேட்டி கொடுக்க மறுத்து விட்டனர்.
பர்வீன் மகன் பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்பட்டு ரத்தம் தோய்ந்த காற்சிராயுடன் அவமானப்பட்ட விவகாரம் ஒரு மாதத்தில் கேரோர் பாக்கா பகுதிய்ல் 3-வது சம்பவம் என்று போலீஸ் அறிக்கைகளே தெரிவிக்கின்றன.
இன்னொரு சம்பவத்தில் மத்ரசா மாடியில் உறங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுவனை முன்னாள் மாணவர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மற்றொரு சம்பவத்தில் 10 வயது சிறுவன் மீது மத்ரசா முதல்வர் பாலியல் வன்முறையை பிரயோகித்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் பையனை மிரட்டியுள்ளார் மதகுருமார்.
இந்தக் குழந்தைகள் பெயர்களை அசோசியேட் பிரஸ் வெளியிடவில்லை, காரணம் பாலியல் பலாத்கார பாதிப்புக்குட்பட்டோர் பெயர்களை வெளியிடக்கூடாது. கேரோர் பாக்காவில் மதகுருமார்கள் மீதான அச்சம் நீதிமன்றங்களில் கூட வெளிப்படுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பர்வீனின் மகனுடைய ஆசிரியர் குற்றம் இழைத்ததற்காக நீதிபதி முன் ஆஜரானார். இந்த ஆசிரியருக்கு ஆதரவாக தீவிரவாத சன்னி முஸ்லிம் அமைப்பான சிபா-இ-ஷாபா தீவிரவாதிகள் அருகிலேயே இருந்தனர்.
இந்த ஆசிரியர் அருகில் அசோசியேட் பிரஸ் செய்தியாளர் சென்று அமர்ந்தவுடன் இந்த சன்னி தீவிரவாதிகள் ஆசிரியரைச் சுற்றி நின்றனர். அப்போது கோர்ட்டில் குழுமியிருந்தவர்கள் பெரிய ஆபத்து இங்கிருந்து போய்விடுங்கள் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்கள். ஆசிரியர் ஏற்கெனவே கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்திருந்தார், அதில் ‘எனக்கு திருமணமாகி விட்டது, எனக்கு அழகான மனைவி இருக்கிறார், நான் இந்தச் சிறுவனை அவ்வாறு பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
பயத்தின் ஆட்சி:
பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட இஸ்லாமியப் பள்ளிகளின் எண்ணிக்கை 22,000 ஆகும். இங்கு படிக்கும் மாணவர்கள் மிகவும் ஏழைகள், இந்தப் பள்ளிகளில் உணவும், கல்வியும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
2-3 அறைகளே உள்ள கிராமங்களில் உள்ள பல மத்ரசாக்கள் பதிவு செய்யப்படாமலேயே செயல்பட்டு வருகின்றன. இவைகளில் கல்வி என்பது கிடையாது, குர் ஆனைக் கற்பது மட்டுமே நடந்து வருகிறது. பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பர்வீனின் மகன் இத்தகைய பதிவு செய்யப்படாத பள்ளியில் படித்தவனே.
மத்ரசாக்களுக்கு நிதி அளிப்பவர்கள் பணக்கார வர்த்தகர்கள், மதம் சார்ந்த அரசியல் கட்சிகள், பிற நாட்டிலிருந்தும் அன்பளிப்புகள், நிதிகள் வருகின்றன. குறிப்பாக சவுதி அரேபியாவிலிருந்து நிதி வருகிறது. இஸ்லாமியச் சிந்தனைப் பள்ளிகளான ஷியா மற்றும் சன்னி பிரிவினர்களால் மத்ரசாக்கள் வழி நடத்தப்படுகின்றன. வலதுசாரி மதத்தீவிரவாதம் பாகிஸ்தானில் அதிகரித்துள்ளதையடுத்து மதரசாக்களில் மதகுருமார்களின் கையும் ஓங்கிவிட்டது, முன்பெல்லாம் இந்த மதகுருமார்கள் கிராம அதிகாரியையே உணவுக்கு நம்பியிருக்க வேண்டியிருந்தது, ஆனால் தற்போது இவர்கள் கை ஓங்கியுள்ளது. புகார்களே வருவதில்லை, அவ்வளவு பயம், ‘முல்லாக்களைக் கண்டு அஞ்சாதவர்களே கிடையாது’ என்று மனித உரிமை வழக்கறிஞர் சயிப் அல் முல்க் ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
கேரோர் பாக்கா யூனியன் கவுன்சிலர் ஆஸம் ஹுசைன் கூறும்போது, “ஏழை மக்கள் பயப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. முல்லாக்களுக்கு போலீஸார்கள் உதவுகின்றனர். ஏழைகளுக்கு போலீஸ் உதவுவதில்லை. இது ஏழைகளுக்கும் தெரியும் அதனால் போலீஸிடம் செல்வது விரயம் என்பதை அறிந்துள்ளனர்.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண போலீஸ் இருப்பதிலேயே பெரிய ஊழல் வாதிகள் என்று பஞ்சாப் மாகாண ஊழல் எதிர்ப்புத் துறை அறிக்கை ஒன்றே கூறுகிறது. இப்பகுதியில் மதகுருமாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுவன், “எனக்கு பயமாக இருக்கிறது, நடந்ததை வெளியே சொன்னால் என் குடும்பத்தினரை கொலை செய்வதாக மிரட்டினார்” என்கிறான். நடப்பது என்னவென்று தெரியாமல் இந்தச் சிறுவனது அண்ணன், பையனை அடித்து உதைத்து மீண்டும் அதே மதரசாவுக்கு அனுப்புகிறார்.
இதே மதகுருமார் இன்னொரு பையனை பலாத்காரம் செய்ய, போலீஸ் புகார் சென்று அவர் கைது செய்யப்பட்டார், ஆனால் பஞ்சாப் அரசு அதிகாரிகள் தலையிட்டு மதகுருமார் விடுவிக்கப்பட்டுள்ளார். மதகுருமாரை மீண்டும் கைது செய்யக் கோரி போராட்டம் வெடித்தது.
பையனின் அண்ணனை மதகுருமார் அழைத்த போது நடந்ததை விவரிக்கும் அவர், “அவர் ஏதோ ‘பாஸ்’ போல் அமர்ந்திருக்கிறார், நான் நின்று கொண்டிருக்க வேண்டுமாம். சமரசமாகப் போக நாங்கள் மிரட்டப்படுகிறோம், எங்களுக்கு வேறு வழியில்லை, நாங்கள் ஏழைகள்” என்றார்.
பாகிஸ்தானில் பிரிட்டிஷ் கால சட்டமும் இஸ்லாமிய ஷரியாச் சட்டமும் இணைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றவாளியை மன்னிக்கும் தெரிவைக் கடைபிடிக்கின்றனர். கடந்த ஆண்டு கவுரவக் கொலைகளைத் தடுக்க இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது, கவுரவக்கொலைகளைச் செய்து விட்டு பாகிஸ்தானில் இனி தப்பிக்க முடியாது, ஆனால் மதகுருமார்களின் பாலியல் பலாத்கார விவகாரத்தில் இன்னும் மன்னிக்கும் பிரிவு உள்ளது.
ஆனாலும் உள்ளூர் சமூகத் தொண்டு அமைப்பான ரோஷன் பாகிஸ்தான் மதகுருமாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணைப் போராடி வழக்குத் தொடுக்க சம்மதிக்க வைத்தனர், இதனால் 2016-ம் ஆண்டு குற்றவாளி மதகுருமாருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது.
பல சந்தர்ப்பங்களில் மிரட்டலுக்குப் பயந்தும் சில சமயங்களில் பணம் வாங்கிக் கொண்டும் ஏழை மக்கள் அமைதியாகி விடுகின்றனர்.
நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பர்வீனும் தன் மகன் விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்று போராடத் துணிந்தார், ஆனால் தீவிரவாதிகள் மதகுருமார் மீதான புகாரைக் கைவிடுமாறும் பணம் வாங்கிக் கொள் என்றும் வற்புறுத்தப்பட்டுள்ளார். கடைசியில் மதகுருமாரை தாய் மன்னித்ததுதான் நடந்தது. 300 டாலர்கள் கைமாறியுள்ளது. மதகுருமார் தப்பித்தார்.
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதகுருமார்கள், தீவிரவாதிகள், மாகாண அதிகாரிகள், பணக்காரர்கள், போலீஸார்கள் ஆகியோர் வலைப்பின்னலான அதிகாரம் வலுவடைந்துள்ளதால் பாதிக்கப்படும் ஏழை முஸ்லிம் மக்களுக்காக சேவை செய்வோர் அரிதிலும் அரிதாகி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT