Published : 17 Jul 2023 03:00 PM
Last Updated : 17 Jul 2023 03:00 PM

இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் - தாக்கம் என்ன?

டெல் அவிவ்: இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ராணுவத்தில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. வான்வழித் தாக்குதலின்போது இலக்குகளை தேர்வு செய்தல், போருக்கான தளவாடங்களை முறைப்படுத்துதல் போன்ற பணிகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுதங்கள் வழங்கி வருவதாக இஸ்ரேல் நீண்ட காலமாகவே குற்றம் சுமத்தி வருகிறது. இதன் காரணமாகவும் இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில், சமீப காலமாக இஸ்ரேல் - ஈரான் மோதல் வலுத்து வருகிறது. இதனையொட்டி பாதுகாப்புப் படையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை இஸ்ரேல் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏஐ தொழில்நுட்பப் பயன்பாட்டை உறுதி செய்துள்ள இஸ்ரேல், அது எந்தக் குறிப்பிட்ட ஆபரேஷனுக்கானது என்பதைத் தெரிவிக்கவில்லை. ஃபயர் ஃபேக்டரி என்ற ஏஐ மாதிரியை இஸ்ரேல் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வான்வழித் தாக்குதல் இலக்கை தேர்வு செய்து தருவதோடு, அந்தப் பகுதிக்கு எவ்வளவு வெடிப்பொருள் பயன்படுத்த வேண்டும், எந்த நேரத்தில் அவற்றைப் பிரயோகப்படுத்துவது என்பனவற்றை கணித்துத் தரும். இவை அனைத்தும் மனித மேற்பார்வையின் கீழ்தான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரிகள் ராணுவத்தில் ஏஐ தொழில்நுட்பம் பயன்பாடு குறித்து கர்ணல் உரி கூறுகையில், “மணிக் கணக்கில் செய்த பணிகளை இனி நிமிடங்களில் முடிந்துவிடும். அதனை ஒரு சில நிமிடங்கள் மனிதர்கள் மேற்பார்வை செய்தால் வேலை முடிந்தது. ராணுவத்தில் இப்போது உள்ள ஆள் பலத்துடனேயே ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு நிறைய செய்துவிடலாம்” என்றார்.

ஆனால், ராணுவத்தில் ஏஐ பயன்பாடு குறித்து ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டத் துறை பேராசிரியர் டல் மிம்ரான் கூறுகையில், "ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது இலக்குகளை கணிப்பதில் ஏதேனும் ஒரு தவறு நடந்துவிட்டால் யார் பொறுப்பு? ஏஐ தொழில்நுட்பத்தால் சரியாக பதிலளிக்க முடியாதபட்சத்தில் யார் மீது பழி சொல்ல முடியும்? ஒரே ஒரு தவறு ஒரு குடும்பத்தையே காலி செய்துவிடாதா?" என்று வினவியுள்ளார்.

2021-ல் இஸ்ரேல் பாதுகாப்புப் படை காசாவில் நடந்த மோதலை தனது முதல் ஏஐ போர் என்று வர்ணித்தது. காரணம், ராக்கெட் ஏவுதளத்தை கண்டறிதல், ஆளில்லா விமானங்களைப் பணித்தலில் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால் இவ்வாறு தெரிவித்தது.

ஈரானின் யுரேனிய அணுக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஈரான் ஆணு ஆயுதங்களை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறிவருகிறது. இந்தச் சூழலில் இஸ்ரேலுக்கு எதிராக சிரியா, லெபனான், பாலஸ்தீனம், ஈரான் என்று ஓரணியில் திரண்டு தாக்குதல் நடத்தலாம். 50 ஆண்டுகளுக்கு முந்தைய யோம் கிப்பூர் போர் போன்று ஒன்று நடக்கலாம் என்று அச்சப்படுவதால் ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்துவதாக பாதுகாப்புப் படை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x