Published : 17 Jul 2023 12:34 PM
Last Updated : 17 Jul 2023 12:34 PM

பிரபஞ்சத்தின் வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் அல்ல: விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்திய புதிய ஆய்வு

ஒட்டாவா: நமது பிரபஞ்சத்தின் வயது முந்தைய ஆய்வுகளின் படி கணிக்கப்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகமானதாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தின் வயதை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய பிரபஞ்சவியல் மாதிரிக்கு சவாலாக அமைந்துள்ளது.

கடந்த காலங்களில், விஞ்ஞானிகள் நமது பிரபஞ்சத்தின் வயதை ‘பிக் பேங்’ எனப்படும் பெருவெடிப்பிலிருந்து காலத்தை அளவிடுவதன் மூலமும், தொலைதூர விண்மீன் திரள்களிலிருந்து ஒளியின் சிவப்பு மாற்றத்தின் (Redshift) மூலம் பழமையான நட்சத்திரங்களைப் ஆய்வு செய்வதன் மூலமும் மதிப்பிட்டு வந்தனர். கடந்த 2021ம் ஆண்டில், தற்போது நடைமுறையில் உள்ள லாம்ப்டா-சிடிஎம் ஒத்திசைவு மாதிரியின் மூலம் பிரபஞ்சத்தின் வயது 13.797 பில்லியன் ஆண்டுகள் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டனர்.

ஆனால், ஏற்கெனவே கணக்கிடப்பட்ட பிரபஞ்ச வயதை விட மிகப் பழமையானதாக கருதப்படும் மெதுசெலா (Methuselah) போன்ற விண்மீன்களையும் மற்றும் மேம்பட்ட பரிணாம நிலைகளுடன் கூடிய ஆரம்பகால விண்மீன்களையும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விண்மீன் திரள்கள் பெருவெடிப்பு நிகழ்ந்து வெறும் 200 முதல் 400 மில்லியன் ஆண்டுக்குள் உருவானவை என்பதை ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்துள்ளது. அவை வித்தியாசமான முறையில் சிறியதாக இருப்பது மேலும் மர்மத்தை உண்டாக்கியுள்ளது. இதுவரை பிரபஞ்சம் குறித்து அறிவியல் உலகம் உருவாக்கி வைத்துள்ள அடிப்படைகளையே தகர்க்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் (University of Ottawa) இயற்பியல் பேராசிரியர் ராஜேந்திர குப்தா, பெருவெடிப்பு நிகழ்ந்து பிரபஞ்சம் தோன்றியது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அல்ல. கிட்டத்தட்ட இரட்டிப்பு மடங்கான 26.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே பெருவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது என்று புதிய ஆய்வை சமர்ப்பித்துள்ளார். மேலும் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த முந்தைய ஆய்வுகளை மறுபரிசீலனை செய்யவும் ராஜேந்திர குப்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x