Published : 15 Jul 2023 03:51 AM
Last Updated : 15 Jul 2023 03:51 AM
புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த ‘தி கிரான்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்’ விருது அளிக்கப்பட்டதை பணிவுடன் ஏற்கிறேன். இது இந்தியாவுக்கும், 140 கோடி இந்திய மக்களுக்கும் அளிக்கப்பட்ட கவுரவம்’ என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று நேற்று முன்தினம் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார்.
அதன்பின் தலைநகர் பாரீஸில் இந்தியர்களை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். பல துறைகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை எடுத்து கூறிய மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய பிரான்ஸில் உள்ள இந்தியர்கள் முன்வர வேண்டும் என அழைப்புவிடுத்தார்.
அதன்பின் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னுடன் பொருளாதாரம், வர்த்தகம், எரிசக்தி, சுற்றுச்சூழல், போக்குவரத்து, கல்வி, டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் மக்கள் தொடர்பு போன்ற துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பிரான்ஸ் செனட் தலைவர் ஜெரார்ட் லார்ச்சரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இரவு விருந்து: பிரதமர் மோடிக்கு அதிபரின் எலிசி அரண்மனையில் நேற்று முன்தினம் இரவு விருந்து அளிக்கப்பட்டது. அவரை அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் அவரது மனைவியும் வரவேற்றனர். இந்த விருந்து நிகழ்ச்சியில், பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்’ விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கினார். இந்த விருதை பெறும்முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது வழங்கப்பட்டது குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் திலீஜியன் ஆஃப் ஹானர்’ விருதை மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். இது இந்திய மக்கள் 140 கோடி பேருக்கு அளிக்கப்பட்ட கவுரவம். இதற்காக அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கும், பிரான்ஸ் அரசுக்கும் மற்றும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இது, இந்தியா மீது பிரான்ஸ் வைத்துள்ள ஆழமான அன்பையும், நமது நாட்டுடனான நட்புறவை மேலும் வலுப்படுத்த பிரான்ஸ் உறுதியாக உள்ளதையும் தெரிவிக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியில் வரவேற்பு: இந்தியா, பிரான்ஸ் இடையே தூதரக அளவில் நட்புறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் அந்நாட்டு தேசிய தினத்தில் பங்கேற்க பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இது குறித்து ட்விட்டரில் இந்தியில் தகவல் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ‘‘இந்தியாவும், பிரான்ஸும் 25 ஆண்டு கால நட்புறவையும், நம்பிக்கையையும் கொண்டாடுகின்றன. இது வலுவடைந்து கொண்டு வருகிறது. பாரீஸ் நகருக்கு நரேந்திர மோடியை வரவேற்கிறேன்’’ என குறிப்பிட்டிருந்தார்.
3 ரஃபேல் போர் விமானம்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு 6,300 வீரர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பும் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் முப்படை வீரர்களும் பங்கேற்று அணிவகுத்து சென்றனர். இந்திய ராணுவத்தின் சார்பில் பஞ்சாப் படைப்பிரிவு அணி வகுப்பில் பங்கேற்றது. முதல் உலக போரின் போது கடந்த 1915-ம் ஆண்டு செப்டம்பர் பிரான்ஸில் நியூவே சப்பேலி என்ற இடத்தில் நடந்த போரில் பஞ்சாப் படைப்பிரிவு பங்கேற்றது. இதை நினைவு கூரும் வகையில், பிரான்ஸ் நாட்டின் தேசிய தின அணிவகுப்பில் பஞ்சாப் படைப்பிரிவு பங்கேற்றது. இந்திய விமானப்படையின் 3 ரஃபேல் போர் விமானங்களும், பிரான்ஸ் விமானப்படையுடன் இணைந்து சாகசத்தில் ஈடுபட்டன.
விரைவில் இந்தியன் யுபிஐ: பிரான்ஸில் இந்திய மக்களிடம் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘பிரான்ஸில் இந்தியாவின் யுபிஐயை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இது ஈஃபிள் கோபுரத்தில் இருந்து தொடங்கப்படும். விரைவில் இந்திய சுற்றுலா பயணிகள் யுபிஐ மூலம் ரூபாயில் பணம் செலுத்த முடியும்’’ என்றார்.
யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகியவை இதுபோன்ற ஒப்பந்தத்தை ஏற்கனவே செய்துள்ளன. இதன் மூலம் இரு நாட்டு மக்கள் யுபிஐ மூலம் இரு நாடுகளிலும் பணம் செலுத்திக் கொள்ளலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகியவை யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை ஏற்கெனவே பின்பற்றுகின்றன.
யுபிஐ சேவைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் என்பிசிஐ (நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) இன்டர்நேஷனல் ஈடுபட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT