Published : 15 Jul 2023 03:21 AM
Last Updated : 15 Jul 2023 03:21 AM

இந்தியா-பிரான்ஸ் உறவுகளின் முக்கிய அம்சம் பாதுகாப்பு ஒத்துழைப்பு - பிரதமர் மோடி பேச்சு

பாரிஸ்: இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவையை பிரான்ஸில் அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். இதையடுத்து, அதிபர் இம்மானுவேல் மேக்ரனை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இம்மானுவேல் மேக்ரன், தங்கள் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருதை வழங்கி கவுரவித்தார். இதற்கு முன் இந்த விருதை, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, இங்கிலாந்தின் தற்போதைய அரசர் சார்லஸ், ஜேர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

இதனிடையே இந்திய பிரதமர் மோடி நேற்று பாரிஸில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். அப்போது அவர்கள் முன்னிலையில் இரு தரப்பு பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேசுகையில், "இந்தியா-பிரான்ஸ் உறவுகளின் முக்கிய அம்சங்களில் ஒன்று பாதுகாப்பு ஒத்துழைப்பு. பாதுகாப்பு ஒத்துழைப்பே எப்போதும் இரு நாட்டு உறவுகளின் அடித்தளமாக உள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான நம்பிக்கையின் சின்னமாகவும் இது விளங்குகிறது.

மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் திட்டங்களில் பிரான்ஸ் ஒரு முக்கிய பங்குதாரரும்கூட. நீர்மூழ்கிக் கப்பல்களாக இருந்தாலும் சரி, இந்திய கடற்படைக் கப்பல்களாக இருந்தாலும் சரி, இரு நாடுகளும் இணைந்து நமது தேவைகளை மட்டுமல்ல, மற்ற நட்பு நாடுகளின் தேவைகளையும் நிறைவேற்ற விரும்புகிறோம். இரு நாடுகளின் கூட்டாண்மையின் 25 ஆண்டுகள் கொண்டாட்டங்களை நாம் கொண்டாடுகிறோம். முந்தைய 25 ஆண்டுகளின் கூட்டாண்மையின் வலுவான அடித்தளத்தோடு அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்குகிறோம்.

இரு நாடுகளையும் வளர்ந்த நாடுகளாக மாற்ற இந்திய மக்கள் உறுதி எடுத்துள்ளனர். இந்தப் பயணத்தில் பிரான்ஸை இந்தியாவின் இயற்கையான கூட்டாளியாகவே பார்க்கிறோம். பிரான்ஸின் தேசிய தினம் உலகுக்கு 'சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்' ஆகியவற்றின் அடையாளமாக காட்சியளிக்கிறது. இந்தியாவில் தேசிய அருங்காட்சியகத்தின் வளர்ச்சியில் பிரான்ஸ் அரசு பங்குதாரராக இணைகிறது. இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவையை பிரான்ஸில் அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளோம்" இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x