Published : 14 Jul 2023 01:16 PM
Last Updated : 14 Jul 2023 01:16 PM
சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும் என்பதால் உலகமே இந்த நிகழ்வை எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில் சற்றே திரும்பிப் பார்த்தால் 1958 முதல் இதுவரை நிலவுக்கு முழுமையான வெற்றி அல்லது பகுதி வெற்றி கண்ட என மொத்தம் 70 மிஷன்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 41 மிஷன்கள் தோல்வியில் முடிந்தன என்று நாசா (அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்) புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
1950, 1960 மற்றும் 1970களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா (அப்போது சோவியத் குடியரசு) மட்டுமே நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியிருந்தன. 90 மிஷன்களில் 40 வெற்றி கண்டன. 1980களில் நிலவு சார்ந்து எந்தவித விண்வெளி ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 1990ல் ஜப்பான் நிலவு ஆராய்ச்சியில் இணைந்தது. ஹிட்டன் ஆர்பிட்டர் என்பது அதன் பெயர். ஹிட்டன் ஜப்பானின் பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள் ஆகும். எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் கிரகப் பணிகளுக்கான தொழில்நுட்பங்களைச் சோதித்து சரிபார்க்க வடிவமைக்கப்பட்டதாகும். ஹிட்டன் விண்கலத்தில் ஹகோரோமோ என்ற சிறிய செயற்கைக்கோள் இருந்தது. அது நிலவுக்கு அருகே நிலைநிறுத்தப்பட்டது. 2000ல் சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை இணைந்து நிலவுக்கான முதல் ஆர்பிட்டல் மிஷன்களை வெற்றிகரமாக மேற்கொண்டன.
இன்று இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முன்னதாக, நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. பல்வேறுகட்ட பயணங்களுக்கு பிறகு, சந்திரயான்-2 விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT