Published : 12 Jul 2023 01:31 PM
Last Updated : 12 Jul 2023 01:31 PM
கீவ்: நேட்டோ உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீதான வான்வழி தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி இருக்கிறது.
ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. வில்னியஸ் மாநாட்டில் உக்ரைனுக்கு நல்ல தகவல் கிடைக்கும் என்று நேட்டோ அமைப்பின் தலைவர் ஜின்ஸ் ஸ்டோலன்பெர்க் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்யா, கீவ்வில் தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் கீவ் வாசிகள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று உக்ரைன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையில் இந்தோனேஷிய செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாரோவ், “மேற்குலக நாடுகள் ரஷ்யாவை தோற்கடிக்கும் முயற்சியை நிறுத்தும் வரை உக்ரைன் உடனான போரை நிறுத்த மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேட்டோவில் உக்ரைனை இணைப்பதற்கு தாமதம் ஏற்படுத்துவது அபத்தமானது. இந்தத் தாமதத்தை வைத்துப் பார்த்தால் உக்ரைனை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக்க தயாராக இல்லை என்று தெரிகிறது. 2008-ஆம் ஆண்டே நேட்டோவில் உக்ரைன் இணையும் என்று நேட்டோ அமைப்பு கூறியது. ஆனால், எப்போது என்று அது குறிப்பிடவில்லை.
தற்போது வில்னியஸில் நடக்கும் நேட்டோ அமைப்பு நாடுகளின் மாநாட்டில் சில முக்கிய விஷயங்கள் உக்ரைன் இன்றி விவாதிக்கப்பட உள்ளதாக எங்களுக்கு அறிகுறிகள் தெரிகின்றன. இந்த மாநாட்டில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நோட்டோவில் இணைவதற்காக அல்ல. நிச்சயமற்ற தன்மை என்பது பலவீனத்தை குறிக்கும். இதுகுறித்து வில்னியஸ் மாநாட்டில் நான் பேச இருக்கிறேன்” என்று கோபமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT