Published : 11 Jul 2023 03:47 PM
Last Updated : 11 Jul 2023 03:47 PM

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டதாக ஐ.நா. தகவல்

நியூயார்க்: வறுமை ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச வறுமைக் குறியீட்டு அறிக்கையின் அண்மைக் குறிப்பில் இது இடம்பெற்றுள்ளது. யுஎன்டிபி எனப்படும் ஐ.நா. வளர்ச்சித் திட்டம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

இந்தியாவில் வறுமை நிலவரம் தொடர்பாக 2005/2006 முதல் 2019/2021 வரையிலான 15 ஆண்டு காலத்தில் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா உள்பட 25 நாடுகள் கடந்த 15 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்போடியா, சீனா, காங்கோ, ஹொண்டூராஸ், இந்தோனேசியா, மொராக்கோ, செர்பியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்தப் பட்டியலில் அடங்கும்.

ஐ.நா. புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஏப்ரல் மாதம் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சியது. இந்திய மக்கள் தொகை தற்போது 142.86 கோடி என்றளவில் உள்ளதாக ஐ.நா.வின் அண்மை அறிக்கை தெரிவிக்கின்றது. அதன்படி, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2005-ல் 44.3% ஆக இருந்த நிலையில் 2019/2021-ல் 11.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

குழந்தை இறப்பு விகிதம் 4.5 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. சமையல் எரிவாயு வசதி இல்லாதோர் எண்ணிக்கை 52.9 சதவீதத்தில் இருந்து 13.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. சுகாதார கட்டமைப்பு வசதிகள் இல்லாதோரின் எண்ணிக்கை 50.4 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. சுத்தமான குடிதண்ணீர் வசதி இல்லாதோர் எண்ணிக்கை 16.4 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. மின்சார வசதி இல்லாதோர் எண்ணிக்கை 44.9 சதவீதத்தில் இருந்து 13.6 சதவீதமாக குறைந்துள்ளது.

இவை எல்லாவற்றின் அடிப்படையிலும், இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வறுமை ஒழிப்பு நிகழ்ந்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் வறுமை ஒழிப்பில் காட்டியுள்ள முன்னேற்றம் வறுமை ஒழிப்பு என்பது சாத்தியமானதே என்பதை நிரூபித்துள்ளதாக ஐ.நா. அறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் முழுவீச்சில் சில தகவல்களைப் பெறுவதில் சிக்கல் இருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x