Published : 11 Jul 2023 12:52 PM
Last Updated : 11 Jul 2023 12:52 PM
ஜோஹனெஸ்பெர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோஹனெஸ்பெர்க் நகரில் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் ஆங்காங்கே மூடப்பட்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரமாக அறியப்படுவதால் வியாபார, வர்த்தக ரீதியாக இந்த பனிப்பொழிவால் சிரமங்கள் இருந்தாலும் இத்தகைய அரிதான நிகழ்வு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகின்றனர் ஜோஹனெஸ்பெர்க் நகரவாசிகள். ஆனால், திடீர் பனிப்பொழிவால் மிகக் கடுமையான குளிர்நிலை ஏற்படலாம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜோஹனெஸ்பெர்க் நகரத்தில் கடந்த வாரம் தொடங்கி கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. கடந்த வார இறுதியில் இது “cut-off low” என்ற நிலையை எட்டியது. மேற்கு காற்று தெற்கு நோக்கி நகர்ந்ததால் இந்த அரிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகளின் கூரைகள், வாகனங்கள், சாலைகள் என எங்கெங்கும் பனி கொட்டிக்கிடக்கிறது. மக்கள் நடக்கும்போது பனித்துகள்கள் பொழிவதை ரசித்துச் செல்கின்றனர். ஹோஹனெஸ்பெர்க்கில் உள்ள நர்சரி பள்ளிகளில் குழந்தைகள் பனிப்பொழிவைக் கண்டு ரசித்து மைதானங்களில் விளையாடி வருகின்றனர். அவர்களில் பலரும் பனிப்பொழிவை முதன்முறையாக நேரடியாகப் பார்ப்பதால் மகிழ்ச்சியுடன் அதனை வரவேற்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இந்த பனிப்பொழிவு குறித்து தென் ஆப்பிரிக்க வானிலை சேவைகள் அமைப்பின் மூத்த வானியல் அறிஞர் மோஃபோகெங் கூறுகையில், "கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் இதுபோல் 2012ல் பனி பொழிந்தது. அதேபோல் இப்போது மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜோஹனெஸ்பெர்கின் தென் பகுதிகளில் குறிப்பாக காடெங் மாகாணத்தில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஈஸ்டர்ன் கேப், க்வாசுலு நடால் மாகாணங்களிலும் பனிப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது" என்றார். ஜோஹனெஸ்பெர்கில் வசிக்கி லெராடோ மாடேப்ஸ் என்பவர் கூறுகையில், "இதுபோல் இங்கே பனிப்பொழிந்து அதிக காலம் ஆகிவிட்டது. எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
ஜோஹனெஸ்பெர்க் நகரம் கடல் மட்டத்தில் இருந்து 5600 அடி உயரத்தில் தான் இருக்கிறது. இருப்பினும் அங்கே பனிப்பொழிவு என்பது அரிதானதாகவே உள்ளது. கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு பனிப்பொழிவு இருந்தது. அதற்கும் முன்னர் 1996 ஆம் ஆண்டு பனிப்பொழிவு நிகழ்ந்திருக்கிறது. இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்க வானிலை ஆய்வு மையம், "இந்த அரிய பனிப்பொழிவு நிகழ்வால் சாலையோரம் வசிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும், கடல் சீற்றம், சூறாவளிக் காற்று காரணமாக தென் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில் பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக அங்கு நங்கூரமிடப்பட்டிருக்கும் சிறிய கப்பல்கள் சேதமடையலாம்" என்று எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT