Published : 10 Jul 2023 09:53 PM
Last Updated : 10 Jul 2023 09:53 PM

செனகலில் இருந்து ஸ்பெயினுக்கு 300 பேர் பயணித்த 3 படகுகள் மாயமானதாக தகவல்

எல் எஜிடோ: செனகல் நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு 3 படகுகளில் பல்வேறு காரணங்களால் புலம்பெயர முயன்ற 300 பேரை காணவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ஸ்பெயின் நாட்டு உதவிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 23-ம் தேதி அன்று மத்திய செனகல் பகுதியான Mbour நகரில் இருந்து 100 பேருடன் இரண்டு படகுகள் புறப்பட்டுள்ளன. அதற்கடுத்த நான்காவது நாள் 200 பேருடன் மற்றொரு படகு புறப்பட்டுள்ளது. இதனை வாக்கிங் பார்டர்ஸ் எனும் ஸ்பெயின் நாட்டு உதவிக் குழு தெரிவித்துள்ளது. இந்த படகுகள் புறப்பட்டது முதல் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.

“காணாமல் போன இந்த மக்களை நாம் தேட வேண்டியது மிகவும் அவசியம். கடலில் பயணித்த மக்களில் அதிகமானோர் காணவில்லை. இது இயல்பானது அல்ல. இந்த பணியை மேற்கொள்ள நிச்சயம் வானூர்திகள் தேவைப்படும்” என வாக்கிங் பார்டர்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஹெலினா மலேனோ கார்சன் தெரிவித்துள்ளார்.

கேனரி தீவுகளில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கப்பலைக் கண்டதாகக் ஸ்பெயின் நாட்டு மீட்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. வான்வழியில் பயணித்த போது அந்த படகு அடையாளம் காணப்பட்டுள்ளது. அது காணாமல் போன செனகல் நாட்டு படகுகளில் ஒன்றாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதை மீட்பு படகுகள் அடைய எப்படியும் சில மணி நேரங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செனகல் நாட்டில் இருந்து ஸ்பெயின் நாட்டை அடைய உதவும் இந்த நீர் வழி தடம் உலகின் ஆபத்தான நீர் வழி தடம் என வாக்கிங் பார்டர்ஸ் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டும் இந்த வழியாக புலம்பெயர முயன்ற 800 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கேனரி தீவுகளுக்கு 7,000 பேர் புலம்பெயர்ந்து வந்துள்ளதாக தகவல். கடந்த 2020-ல் சுமார் 23,000 பேர் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். கடந்த ஜூனில் இருந்து இதுவரை சுமார் 19 படகுகள் கேனரி தீவுகளுக்கு வந்துள்ளதாகவும் தகவல்.

காணாமல் போகும் படகுகள் குறித்த விவரங்கள் கூட அறியாதது மிகவும் வருத்தம் அளிப்பதாக வாக்கிங் பார்டர்ஸ் தெரிவித்துள்ளது. மொராக்கோ, மேற்கு சஹாரா மற்றும் மொரிடானியா, செனகல் மக்கள் இப்படி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் செனகல் மக்கள் குறைந்த அளவு பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையின்மை, வன்முறை, அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத காரணங்களால் மக்கள் இடம்பெயர்வதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த மாதம் கிரீஸில் படகில் பயணித்தவர்கள் உயிரிழந்த அசம்பாவிதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. “இதே கடலில் இப்படி 300 அமெரிக்கர்கள் காணாமல் போனதாக கற்பனை செய்து கொள்வோம். என்ன நடந்திருக்கும்? அவர்களை தேட பல விமானங்கள் வந்திருக்கும்” என்கிறார் கார்சன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x