Published : 06 Jul 2023 04:01 PM
Last Updated : 06 Jul 2023 04:01 PM

வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியின்போது தப்பிச் சென்றாரா புதின்? - வலுக்கும் விமர்சனங்கள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

மாஸ்கோ: ரஷ்யாவில் அண்மையில் வாக்னர் ஆயுதக் குழு திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்டது. ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரண்ட அந்த ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கி முன்னேறியது. அந்த வேளையில் ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவிலிருந்து தப்பி பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மிக்கெய்ல் கொடோர்கோவ்ஸ்கி என்ற பெரும் பணக்காரர் இது தொடர்பாக ஒரு பேட்டியில் கூறி விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளார்.

யார் இந்த மிக்கெய்ல் கொடோர்கோவ்ஸ்கி? - மிக்கெய்ல் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனத்தின் தலைவராக இருந்தவராவார். அரசை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட அவர், கடந்த 2003-ல் கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் அவர் 2013-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னர் வெளிநாட்டுக்குச் சென்ற மிக்கெய்ல் புதினின் தீவிர விமர்சகராகவே அறியப்படுகிறார்.

தற்போது மிக்கியெல் 'நியூஸ் வீக்' என்ற பத்திரிகைக்கு மிக்கெய்ல் அளித்தப் பேட்டியில், வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியின்போது ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறியுள்ளார். அதிபர் புதின் சிறப்பு விமானம் மூலம் மாஸ்கோவிலிருந்து புறப்பட்டு வல்டாய் என்ற பகுதிக்குச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். வாக்னர் குழு கிளர்ச்சி தொடங்கியவுடனேயே ரஷ்யாவின் நிலவரம் பற்றி கூர்ந்து கவனித்ததாகவும், ஜூன் 24-ஆம் தேதியன்று புதின் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானம் மாஸ்கோவிலிருந்து புறப்பட்டதாகவும், அது வால்டாய் பகுதி வரை கண்காணிப்பு வளையத்தில் இருந்ததாகவும் கூறினார். அதனால், வால்டாயில் புதின் இறங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதேபோல் ரஷ்ய குடியுரிமையைத் துறந்துவிட்டு இஸ்ரேலில் தஞ்சமடைந்த தொழிலதிபர் லியோனிட் நெவ்ஸ்லினும், வாக்னர் கிளர்ச்சியின்போது புதின் வால்டாயில் தனது வீட்டில் ஒரு பங்கரில் பதுங்கிக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து லியோனிட் தனது ட்விட்டர் பக்கத்தில் "புதின் வால்டியாவுக்குச் சென்றுள்ளார். அவருடன் அவரது நண்பர்களும், கூட்டாளிகளும் சென்றுவிட்டனர். சர்வாதிகாரி புதின் இப்போது பீதியில் இருக்கிறார். அவரைப் பாதுகாக்க கூடுதல் படைகள் விரைந்திருப்பதாக எனக்கு நம்பத்தகுந்த வட்டரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.

மிக்கெய்லின் பேட்டியைத் தொடர்ந்து லியோனிடும் அதே கருத்தைக் கூறியிருப்பதால் ஆயுதக் குழுவுக்குப் பயந்து புதின் தப்பிச் சென்றாரா என்ற விமர்சனங்களும், விவாதங்களும் வலுத்து வருகின்றன. | வாசிக்க: ரஷ்ய அதிபர் புதினுக்கு புதிய நெருக்கடியாக வலம் வரும் வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் என்ன? |

மீண்டும் ரஷ்யாவில் பிர்கோஸின்? - இதற்கிடையில் திடீர் கிளர்ச்சிக்குப் பின்னர் பெலாரஸ் சென்றதாக நம்பப்பட்ட வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸின் அந்நாட்டில் இல்லை என்று அதன் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். மேலும், அவர் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் தான் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x