Published : 05 Jul 2023 12:03 PM
Last Updated : 05 Jul 2023 12:03 PM

உலகின் அதிக வெப்பமான நாள் ஜூலை 3, 2023: எச்சரிக்கும் சூழலியல் விஞ்ஞானிகள்

கடந்த மே மாதம் சீனாவின் ஷாங்காய் நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவான நாளில் சாலையில் மக்கள் வெப்ப தற்காப்பு கவசங்களுடன் பயணித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

அதிக வெப்பமான நாள், குளிர்ச்சியான நாள் போன்ற புள்ளிவிவரங்களை பதிவு செய்யும் பழக்கம் ஆராய்ச்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் தொடங்கியதிலிருந்து கடந்த 3 ஆம் தேதி (ஜூலை 3, 2023) தான் உலகின் அதிக வெப்பமான நாள் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக சூழலியல் ஆய்வுக்கான அமெரிக்க மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 3, 2023 அன்று சர்வதேச சராசரி வெப்பநிலை என்பது 17.01 டிகிரி செல்சியஸ் (62.62 ஃபேரன்ஹீட்) ஆக இருந்தது. இது முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2016ல் பதிவான 16.92 டிகிரி செல்சியஸ் (62.46 ஃபேரன்ஹீட்) அளவைவிட அதிகமாகும்.

அமெரிக்காவின் தென்பகுதி கடந்த சில வாரங்களாக வாட்டும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டது. அதேபோல் சீனாவிலும் பல பகுதிகளில் வெப்ப அலை வீசியது. அங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சராசரியாக அன்றாடம் 35 டிகிரி செல்சியஸுக்கு மேலேயே வெப்பம் பதிவானது. அதேபோல் வடக்கு ஆப்பிரிக்காவில் சமீப காலமாக சராசரி வெப்ப 50 டிகிரி செல்சியஸ் என்றளவில் பதிவாகி வந்தது.

அண்டார்டிகாவில்கூட இந்த ஆண்டு குளிர்காலத்தில் வழக்கத்தைவிட வித்தியாசமான அளவுகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. அர்ஜென்டைன் தீவுகளில் உள்ள உக்ரைனின் வெர்னாட்ஸ்கி ஆய்வுத் தளத்தில் அண்மையில் 8.7 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது இந்தப் பகுதியில் இதற்கு முந்தைய ஜூலை மாதங்களில் பதிவாகாத அளவு என்று ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மரண ஒலி: இந்த காலநிலை மாற்றம் குறித்து லண்டனின் கிராந்தம் இன்ஸ்டிட்யூட் ஃபார் க்ளைமேட் சேஞ்ச் கல்லூரியின் சூழலியல் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் ஆட்டோ கூறுகையில், "இந்த வெப்பநிலையானது ஏதோ ஒரு மைல்கல் என நினைக்க வேண்டாம். இது நாம் கொண்டாடும் எண் அல்ல. உண்மையில் இது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்குமான மரண ஒலி" என்றார். இந்த உச்சபட்ச வெப்பநிலையானது நேரடியாக எல் நினோ தாக்கத்தின் விளைவு என்று சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூறுகின்றனர். வாசிக்க: El Nino 2023 | ‘எல் நினோ’ தாக்கம் - உலகின் எந்தெந்த நாடுகள் பாதிக்க வாய்ப்பு?

பெர்க்லி எர்த் மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜெக் ஹாஸ்ஃபாதர் கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக, உலகளவில் பசுமைக்குடில் வாயுக்கள், கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் அதிகரிப்பதுடன் எல் நினோ தாக்கமும் இணைந்துள்ளதால் இந்த ஆண்டு பதிவாகக் கூடிய உச்சபட்ச வெப்பநிலைகளின் தொடக்கம்தான் ஜூலை 3 பதிவு என்று கூறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x