Published : 05 Jul 2023 10:12 AM
Last Updated : 05 Jul 2023 10:12 AM

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைய வேண்டும்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வலியுறுத்தல்

புதுடெல்லி: ஆப்கனிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைய வேண்டும் என்று இந்தியா தலைமையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுடெல்லி பிரகடனம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஆப்கனிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய நாடுகள் பங்கேற்பாளர்களாகவும், அசர்பைஜான், அர்மீனியா, கம்போடியா, நேபாள், துருக்கி, இலங்கை ஆகிய நாடுகள் கலந்துரையாடல் மேற்கொள்பவர்களாகவும் இணைந்துள்ளன.

இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நேற்று நிறைவடைந்தது. இதில், ஆப்கனிஸ்தான் தொடர்பான பிரகடனம் அறிவிக்கப்பட்டு அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. அதில், "ஆப்கனிஸ்தானின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. ஆப்கனிஸ்தானில் அனைத்து இனக் குழுக்கள், மதக் குழுக்கள், அரசியல் குழுக்களையும் கொண்ட அரசு அமைவது மிகவும் முக்கியம் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கருதுகிறது; அது நிகழ அழைப்பு விடுக்கிறது. ஆப்கன் மக்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடர்ந்து உதவும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் அடங்கிய நமது இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் ஆப்கானிஸ்தானில் நிலைமை முன்கூட்டியே சீரடைவது மிகவும் முக்கியம் என்று உறுப்பு நாடுகள் நம்புகின்றன. சுதந்திரமான, நடுநிலையான, ஒன்றுபட்ட, ஜனநாயகத்தின்படியான, அமைதியான நாடாக ஆப்கனிஸ்தான் இருக்க வேண்டும்; பயங்கரவாதம், போர் மற்றும் போதைப்பொருள் இல்லாத நாடாக ஆப்கனிஸ்தான் கட்டமைக்கப்பட வேண்டும் என்பது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எதிர்பார்ப்பு" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ஆப்கனிஸ்தானின் நிலை, அனைத்து நாடுகளின் பாதுகாப்புக்கும் நேரடி பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆப்கனிஸ்தான் விஷயத்தில் இந்தியாவின் கவலை மற்றும் எதிர்பார்ப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பல்வேறு நாடுகளின் கவலை மற்றும் எதிர்பார்ப்பைப் போன்றதுதான். ஆப்கனிஸ்தான் மக்களின் நலனை உறுதிப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

ஆப்கன் குடிமக்களுக்கு உதவிகள் செய்வது, அங்கு அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைவது, பயங்கரவாதத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராக அந்நாடு இருப்பதை உறுதிப்படுத்துவது, பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகளை பாதுகாப்பது ஆகியவை நம் அனைவரின் இணைந்த விருப்பமாக உள்ளது.

இந்திய மக்களுக்கும் ஆப்கன் மக்களுக்கும் இடையேயான நட்புறவு என்பது பல நூற்றாண்டுகளைக் கொண்டது. ஆப்கனின் பொருளாதார சமூக முன்னேற்றத்திற்காக இந்தியா கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு உதவிகளை அளித்துள்ளது. 2021ல் தலிபான்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகும் மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது" என்று தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் ஈரான் முழுமையான உறுப்ப நாடாக அங்கீகரிக்கப்பட்டது. தங்களையும் முழுமையான உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற பெலாரசின் கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்று உறுப்பு நாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இந்திய தலைமையின் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x